ஜெ.மரணம்: ஜெயா டிவி சிஇஒ-க்கு விசாரணை ஆணையம் சம்மன்!

--

சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், ஜெயா டிவியின் சிஇஓ-ஆக இருக்கும் விவேக்  ஜெயராமனுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் உறவினரான இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன். இவர்தான் ஜெயா டிவியை நிர்வகித்து வருகிறார்.

இந்நிலையில், ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியானது குறித்து விசாரணை செய்வதற்காக,  விவேக் ஜெயராமனுக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

வரும் 14 அல்லது 15ந்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மனில் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்திலும், ஜெயா டிவியின் நிர்வாக அதிகாரி விவேக் வீட்டிலும் 5 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில், ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள், ஜெ.சிகிச்சை பெற்ற வீடியோவை, டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்த வீடியோ சசிகலாவால் எடுக்கப்பட்டு, இளவரசின் மகன் விவேக் மற்றும் மகள் கிருண்ஷபிரியாவின் பாதுகாப்பில் பத்திரமாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், விசாரணை ஆணையம் கேட்டால், அங்கு தாக்கல் செய்யலாம் என்று கூறி டிடிவியிடம் கொடுத்ததாகவும், ஆனால், அவர் தேர்தலுக்காக அதை வெளியிட்டுவிட்டார் என்று விவேக் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் விவேக் ஜெயராமனுக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.