நெட்டிசன்:
சரவணன் சவடமுத்து (Saravanan Savadamuthu) அவர்களின் முகநூல் பதிவு:
·
ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி இறந்த தினத்தன்று முன்னாள் பிரதமர்கள் என்கிற முறையில்கூட அவர்களது சமாதிக்குச் செல்ல விருப்பமில்லாமல் ஓடி ஒளிந்த பிரதமர் மோடி, நம்ம ஆத்தாவுக்காக விழுந்தடித்து ஓடி வந்ததற்கு, வெறும் நட்பு மட்டுமா காரணம்..?
இந்தியாவின் முதல் குடிமகனான ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி புரோட்டோகாலையும் மீறி, தலைநகரில் பிரதமரும், ஜனாதிபதியும் ஒரே நேரத்தில் இல்லாமல் இருக்கக் கூடாது என்கிற விதியைக்கூட புறந்தள்ளிவிட்டு ஓடோடி வந்தாரென்றால் வெறும் நட்பு மட்டும்தான் காரணமா..?
இல்லை.. இது பக்கா அரசியல்..!
அடுத்த வருட ஜூலை 25-ம் தேதியோடு நமது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைகிறது.
புதிய ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்தாண்டு ஜூன் மாதம் வெளியாகும். பாராளுமன்ற உறுப்பினர்களுடன், மாநில சட்டமன்ற உறுப்பின்ர்களும் சேர்ந்துதான் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
50 எம்.பி.க்களையும், 132 எம்.எல்.ஏ.க்களையும் கையில் வைத்திருக்கும் அதிமுகவை அத்தனை சுலபமாக ஒதுக்கிவிட முடியுமா என்ன..?
அடுத்து மீண்டும் பதவியில் அமர பிரணாப் முகர்ஜி விருப்பப்படுகிறார். குலாம்நபி ஆசாத் மூலமாக டெல்லி ஆத்தாவிடம் தகவலைச் சொல்லிவிட்டாராம். காங்கிரஸும் இதை ஒத்துக் கொண்டுவிட்டது. “பா.ஜ.க.வும் உங்களை ஏற்றுக் கொண்டால் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை…” என்று சொல்லிவிட்டது.
இதற்காக பா.ஜ.க.வுக்கு நூல்விட்டு வருகிறார் பிரணாப். சில நாட்களாக கொஞ்சம், கொஞ்சம் பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார் பிரணாப்.
“பாராளுமன்றத்தில் தேவையில்லாமல் ரகளை செய்து நேரத்தை வீணாக்குவது முட்டாள்தனம்…” என்று காங்கிரஸை மறைமுகமாகவே கண்டித்து ஓப்பனாகவே பேசியிருக்கிறார் பிரணாப். இதனை குஜராத் பொதுக்கூட்டத்தில் “நமது ஜனாதிபதியே எதிர்க்கட்சியினரை கண்டித்திருக்கிறார் பாருங்கள்..” என்று மோடியே எடுத்துக் கொடுக்கிறார்.
ஆக, பிரணாப்பின் ஆசை எப்படியாவது மீண்டும் ஜனாதிபதியாவதுதான். அதனால்தான் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ஜனாதிபதியின் விமானம் திரும்ப டெல்லிக்கு வந்தும், ராணுவ விமானத்தில் சொகுசு வசதியில்லாமல் வந்து அலைச்சலோடு மாலை வைத்துவிட்டுப் போயிருக்கிறார் பிரணாப்.
திரும்ப தேர்தலில் நின்றால் அதிமுகவினரிடம் உரிமையாக ஓட்டு கேட்கலாம் அல்லவா.. அதற்காகத்தான்..!
ஆனால் மோடியின் எண்ணமோ வேறு மாதிரியல்லவா இருக்கிறது..? அத்வானியை ஜனாதிபதி மாளிகைக்குள் தள்ளிவிட்டு அவரையும் மீறி பிரதமர் பதவியை தான் எடுத்துக் கொண்ட பாவத்துக்கு பிராயச்சித்தம் தேடிக் கொள்ள அவர் நினைக்கிறார். அத்வானி இதனை ஏற்றுக் கொண்டாலும் தேர்தல் நடந்தால் நிச்சயம் கடும் போட்டிதான்.

பாராளுமன்றத்தில் அதிகப்படியான வாக்குகள் பா.ஜ.க.வுக்கு உண்டென்றாலும் மாநில எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளில் கொஞ்சம் குறைந்தாலும் சிக்கலாகிவிடுமே என்பதால்தான் மோடியின் ஜெயலலிதா பாசம் அளவுக்கு அதிகமாக பொத்துக் கொண்டு வந்துள்ளது..!
சின்னாத்தா கட்சியின் பொதுச் செயலாளராக வந்தாலும் சரி.. முதல்வராக வந்தாலும் சரி.. பாஜக இப்போதைக்கு அதனை எதிர்க்கும் வேலையைச் செய்யவே செய்யாது. எல்லாம் அடுத்தாண்டு ஜூலை மாதம் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்புதான்..!
இதை அ.தி.மு.க. தலைமையும் தெரிந்து வைத்துதான் இருக்கிறது. அதனால் அவர்களும் இதை வைத்து தங்களுக்கு ஆக வேண்டிய காரியங்களை நிச்சயம் சாதித்துக் கொள்ளவே நினைப்பார்கள். செய்தும் முடிப்பார்கள்.
வோட்டளித்த நாம் வழக்கம்போல ‘ஆ’ என வாயைப் பொளந்து பார்த்தபடியே வேடிக்கை பார்ப்போம்.
நமக்கு விதிக்கப்பட்டது இதுதான் மக்களே…!