ஜெ. கை நாட்டு: தேர்தல் ஆணையத்தின் மின்னல் வேகம் – சந்தேகம்! ராமதாஸ்

சென்னை,

ஜெயலலிதாவின் கைநாட்டு விசயத்தில் தேர்தல் ஆணையத்தின் மின்னல்வேக செயல் பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதாக  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழகத்தில் நடைபெற இருக்கும் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு. கட்சியின் சின்னம் ஒதுக்க கட்சியின் பொதுச்செயலாளர் படிவம்-பி என்ற பாமில் கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும்.

அதற்காக போட்டியிடும் கட்சியின் தலைமை, வேட்பாளருக்கு  தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னத்தை ஒதுக்க கோரி ‘Form-B’ ல்  கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும் என்பது தேர்தல் விதி.

தற்போது, தமிழகத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு இட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்படும் படிவம் பி-யில் முதல்வர் கையெழுத்துக்கு பதில், அவருடைய கைரேகை (கைநாட்டு) இடப்பட்டிருக்கிறது.

ramadoss

இதுகுறித்து, பாமக தலைவர்  ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மூன்று தொகுதி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் வழங்குவதற்குவதற்கான ஏ மற்றும் பி படிவங்களில் அக்கட்சியின் பொதுச்செயலாளரான ஜெயலலிதா கையெழுத்திடுவதற்கு பதிலாக கைரேகை பதிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இந்த வி‌ஷயத்தில் தேர்தல் ஆணையம் காட்டிய மின்னல் வேகமும், தேர்தல் விதிகளுக்கு மாறாக நடந்துள்ள அடுக்கடுக்கான குளறுபடிகளும் பல ஐயங்களை ஏற்படுத்தியுள்ளன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் சின்னம் ஒதுக்கீட்டு ஆணைப்படி, அரசியல் கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தைப் பெறுவதற்காக, தலைமையால் நியமிக்கப்பட்ட ஒருவரின் கையெழுத்திடப்பட்ட பி படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

14925299_638481052982851_870412890447561799_n

சின்னம் ஒதுக்கீட்டுக்கான பி படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரம் யாருக்கு? என்பதை தெரிவிக்கும் ‘ஏ’ படிவத்தில் கட்சியின் தலைவர் அல்லது பொதுச்செயலாளர் கையெழுத்திடுவார். அதிமுகவைப் பொறுத்தவரை இந்த இரு படிவங்களிலும் ஜெயலலிதா தான் கையெழுத்திட வேண்டும்.

அதிமுக பொதுச்செயலாளர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருவதால், அவரால் கையெழுத்திட இயலாது என்றும், அதனால் அதற்கு பதிலாக கைரேகையை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அதிமுக விடுத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றிருக்கிறது. அதன்படி ஜெயலலிதா கைரேகை பதிக்கப்பட்ட படிவங்கள் வேட்பு மனுவுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சின்னம் ஒதுக்கீட்டுக்கான ஏ மற்றும் பி படிவங்களில் அதற்கான அதிகாரம் பெற்றவரின் கையெழுத்து மட்டுமே இடம் பெற வேண்டும் என்ற நிலையில், அதற்கு பதிலாக கைரேகையிட்டால் போதுமானது என்ற சலுகையை ஜெயலலிதாவுக்கு தேர்தல் ஆணையம் எந்த அடிப்படையில் வழங்கியது என்பது தெரியவில்லை.

‘இந்த வி‌ஷயத்தில் ஜெயலலிதாவுக்கு உதவ தேர்தல் ஆணையம் காட்டிய வேகம் மெய்சிலிர்க்க வைக்கிறது. படிவங்களில் ஜெயலலிதாவின் கையெழுத்துக்கு பதிலாக கைரேகை பதிக்க அனுமதி கோரும் அதிமுகவின் கடிதம் கடந்த 26ந் தேதி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் அளிக்கப்படுகிறது.

அப்படி ஒரு கடிதத்தை அதிமுகவின் சார்பில் யார் அளிக்க வேண்டும் என்று விதிகள் உள்ளனவா? அவை இந்த வி‌ஷயத்தில் கடைபிடிக்கப்பட்டனவா? என்பதெல்லாம் தெரியவில்லை. அவ்வாறு கடிதம் கிடைத்த அடுத்த நிமிடமே, அக்கடிதத்தை அவசர, அவசரமாக தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புகிறார்.

இந்திய தேர்தல் ஆணையமும், அதற்கு வேறு வேலையே இல்லை என்பதைப் போல அடுத்த நாளே அதிமுக வுக்கு சாதகமாக கடிதம் எழுதுகிறது. தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எழுதப்பட்ட அக்கடிதம் தேர்தல் அதிகாரிக்கு வந்து சேர்வதற்கு முன்பே,

அதன் விவரங்கள் அதிமுக மேலிடத்திற்கு சென்று, சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் பழனியை அழைத்தோ, அழைக்காமலோ அவரது முன்னிலையில் சான்றொப்பம் பெறப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

அடுத்த சில மணிகளில் 3 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்கின்றனர்.

இப்படி ஒரு மின்னல் வேகத்தை தேர்தல் ஆணையம் இதுவரை பின்பற்றியது இல்லை.

அ.தி.மு.கவுக்கு அதன் சின்னத்தைப் பெற அனைத்து உரிமைகளும் உள்ளன. அதற்கான விதிகளின்படி அச்சின்னத்தை அக்கட்சி பெற எந்தத் தடையும் இல்லை.

மாறாக, விதிகளுக்கு முரணான வகையில் சின்னத்தை பெற முயலுவதும், அதற்கு வசதியாக தேர்தல் ஆணையம் வில்லாய் வளைவதும் இந்திய ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்தாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.