பெங்களூரூ:

ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான் என்று அவரது அத்தை மகள் லலிதா தெரிவித்துள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்மணி, தான் ஜெயலலிதாவின் மகள் என்றும், ஜெயலலிதாவின் உடலைத் தோண்டிய எடுத்து டி.என்.ஏ. சோதனை நடத்த வேண்டும் என்றும் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது குறித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியது.

இந்த நிலையில் பெங்களூருவில் வசிக்கும் ஜெயலலிதாவின் உறவினர் லலிதா, “அந்தப் பெண் ஜெயலலிதாவின் மகளாக இருக்கக்கூடும்.  ஏனென்றால் 1980ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது” என்று தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

இது குறித்து லலிதா, தமிழ் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

லலிதா – ஜெயலலிதா

“ஜெயலலிதா எனது அம்மாவின் அண்ணன் மகள். அதாவது எனக்கு மாமா மகள். ஜெயலலிதாவுக்கும் ஒருவருக்கும் நெருக்கமான தொடர்பு இருந்தது எனக்கத் தெரியும். இதையடுத்து ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான். எங்கள் பெரியம்மாதான் ஜெயலலிதாவுக்கு பேறுகாலத்தில் உதவியாக இருந்தார்.

இந்த விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று ஜெயலலிதா சத்தியம் வாங்கியிருந்தார்.

1970க்கு பிறகு ஜெயலலிதா எங்கள் குடும்பத்தாருடன் தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை. குழந்தை பேறுகால நேரத்தில் மட்டுமே உதவிக்காக எனது பெரியம்மாவை அவர் அழைத்தார்.

1980களில் ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்தது. அப்போதே, ஜெயலலிதா தாய் சத்யா இறந்துவிட்டதால், மனிதாபிமான அடிப்படையில் எனது பெரியம்மா பேறுகாலம் பார்க்க சென்றார்.

அம்ருதா

பெண் குழந்தை பிறந்தது.  அதை தனது தங்கை முறை உறவுள்ள சைலஜாவிடம் ஜெயலலிதா கொடுத்தார். அவர்தான்  அந்தக் குழந்தையை வளர்த்தார்.

பிறகு மீண்டும் ஜெயலலிதாவுடன் தொடர்பு ஏற்படவில்லை.

தற்போது தன்னை ஜெயலலிதாவின் மகள் என்று சொல்லும் அம்ருதா  உண்மையிலேயே ஜெயலலிதாவின் மகளாக இருக்கலாம்.

ஆனால்  உறுதியாகத் தெரியவில்லை. டிஎன்ஏ டெஸ்ட் செய்தால் உண்மை தெரியவரும்.

அமிருதாவை  கடந்த 3 மாதங்களாகதான் எனக்குத் தெரியும். என்னை அத்தை என்று கூப்பிடுகிறார். அவர்,  தனது அம்மா ஜெயலலிதா என்று உறுதியாக நம்புகிறார். சொத்துக்கு அவர் ஆசைப்படுவதை போல தெரியவில்லை” என்று லலிதா தெரிவித்துள்ளார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.