முதல்வர் உடல்நிலை: 1867 பேர் முன்னெச்சரிக்கை கைது! வெளியூர் பஸ்கள் நிறுத்தம்?

சென்னை,

நேற்று மாலை முதல் முதல்வர் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வருவதாலும், பதற்றத்தை தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றிரவு முதல் இதுவரை 1867 நபர்கள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அதபோல் கேரளா, கர்நாடக பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

arrest

கடந்த செப்டம்பர் 22ந்தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா,  காய்ச்சல், சிறுநீரகத் தொற்று காரணமாக  சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து  இதய மற்றும் சுவாசவியல் நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட செய்தி அறிந்ததும் தமிழக ஆளுநராக பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னை புறப்பட்டு வந்து அவரை சந்தித்து, மருத்துவர்களிடம் உடல் நிலை குறித்து கேட்டுச் சென்றார்.

இந்த செய்தி சென்னை நகரம் முழுவதும் பரவியதையடுத்து, கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டன. சாலை யில் போக்குவரத்து குறைக்கப்பட்டது. சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்லும் பஸ்கள் அளவும் குறைக்கப்பட்டது.

அதேபோல், கர்நாடக அரசு பேருந்துகளும், கேரள அரசு பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. வெளியூர் செல்லும் தனியார்  பஸ்களும் பெருமளவு நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னையிலும் நகரில் அண்ணாசாலை, தேனாம்பேட்டை, கிரீம்ஸ்ரோடு, உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக கவலையுடன்  அமர்ந்திருந்தனர்.

பரபரப்பான இந்த சூழ்நிலையில் அதிமுகவினர் அப்பல்லோவை முற்றுகையிட்டு வருகின்றனர்.

திமுக தலைமையமான அண்ணா அறிவாலயத்திற்கும், கலைஞர் வசிக்கும் கோபாலபுரம், அழ்வார்பேட்டை பகுதிகளிலும்  போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.