ஜெ. மரணம் : நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவர் ஆஜர்

சென்னை:

ஜெ. மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவர்கள் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.

ஜெ. மரணம் குறித்து சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், கடந்த 17ந்தேதி எய்ம்ஸ் மருத்துவர்கள், ஜி.சி கில்னானி, அஞ்சன் டிரிக்கா, நிதீஸ்நாயக் ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு  சம்மன் அனுப்பப்பட்டது. அதையடுத்து, இன்று  நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்குழு முதன்முறையாக சிகிச்சை அளித்தது. இதனைத் தொடர்ந்து அந்த குழு ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கண்காணித்து வந்தது. அதேபோல் ஜெயலலிதா மரணம் அடைந்த அன்றும் இந்த குழு அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தது.

இதன் அடிப்படையில் எய்ம்ஸ் மருத்துவ குழுவிடம் ஜெயலலிதாவின் அப்போதைய உடல்நிலை குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் மற்றும் மருத்துவர் ஜி.சி.கில்னானி ஆகியோர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். மேலும் எய்ம்ஸ் மருத்துவர் அஞ்சன் டிரிகாவும் ஆணையத்தில் ஆஜராக உள்ளார்.