சென்னை,

முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா மரணம் குறித்த எந்த விசாரணைக்கும் தயாராக இருப்பதாக அப்பல்லோ தலைவர் பிரதாப் சி.ரெட்டி இன்று அதிரடியாக கூறினார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது, எந்தவித தகவலையும் கூற மறுத்த அப்பல்லோ, தற்போது, ஜெயலலிதா மரணம் அடைந்து 7 மாதத்திற்கு பிறகு இவ்வாறு தெரிவித்திருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22ந்தேதி நள்ளிரவு உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் குணம் பெற்று வருகிறார்… விரைவில் வீடு திரும்புவார்.. அவர் விரும்பினால் இன்றே வீடு திரும்பலாம் என்று செய்தியாளர்களுக்கு தெரிவித்து வந்த அப்பல்லோ தலைவர், சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு, ஜெயலலிதா சிகிச்சை பலனிளிக்காமல் இறந்துவிட்டார்  என்று கடந்த ஆண்டு டிசம்பர் 5ந்தேதி தெரிவித்தது,

இதனையடுத்து, ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அதிமுக தொண்டர்கள் என பலரும் அப்பல்லோ மருத்துவமனை மீது குற்றம் சாட்டி வந்தனர்.

மேலும், முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர் செல்வமும், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்.

இந்த நிலையில், சுமார் 7 மாதங்களுக்க  ஜெயலலிதா மரணம் குறித்த எந்த விசாரணைக்கும் தயார் என்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி கூறியுள்ளார்.

இன்று  செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜெயலலிதா சிகிச்சையில் யாருடைய தலையீடும் இல்லை. சிறப்பான சிகிச்சை அளித்தோம். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைக்கான ஆவணங்கள் அனைத்தும் உள்ளன. சிகிச்சை அளிக்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை” என்று தெரிவித்தார்.

மேலும், ஜெயலலிதா மரணம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் அளித்த ரெட்டி, விசாரணை கமிஷன் அமைத்தால் தாம் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணம் அடைந்தபோது எந்தவித கருத்தையும் தெரிவிக்க மருத்து வந்த அப்பல்லோ நிர்வாகம், 7 மாதம் கழித்து தற்போது எதற்கும் தயார் என்று எகத்தாளமாக அறிவித்திருப்பது அதிமுக தொண்டர்களிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.