ஜெ. மரணம்: விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜர்!

சென்னை:

ஜெ.மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணை யத்தில் இன்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி உள்ளார்.

முன்னாள் தமிழக முதல்வரான ஜெயலலிதா உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் , கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ம் தேதி சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். சுமார் 75 நாட்களாக அவர் நலமுடன் தேறி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவரது திடீர் மரணம் சந்தேகங்களை எழுப்பியது. இதையடுத்து, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மர்மம் இருப்பதாகவும், அதுகுறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.

அதையடுத்து,  தமிழக அரசால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை  நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளது.

ற்போது விசாரணை இறுதிக் கட்டத்தை நெருக்கி உள்ள நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர், மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட முக்கியஸ்தர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக கோரி உள்ளது.

இதைத்தொடர்ந்து ராதாகிருஷ்ணன் மருத்துவ அறிக்கைகள் அடங்கிய கோப்புகளுடன் இன்று ஆணையத்தில் ஆஜரானார். இதையடுத்து ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடைபெற்று வருகிறருது. இதன் காரணமாக எழிலகம் பகுதியில் உள்ள ஆணையம் அமைந்துள்ள  கலச மஹாலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதையடுத்து,  வரும் 18 ஆம் தேதி  விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல் 19 ம் தேதி எய்மஸ் மருத்துவர்கள் நிக்கில் டண்டன், தேர் கவுரவ் மற்றும் 20 ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி