Random image

ஜெ. மரணம்: ஆளுநர் மாளிகைக்கு விசாரணை ஆணையம் கடிதம்

சென்னை:

ஜெ. மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்  ஆளுநர் மாளிகைக்கு  கடிதம் எழுதி உள்ளது.  அதில், ஜெ. மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரணை ஆணையம் சமீபத்தில், தமிழகத்தின் முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் தனிச்செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் விசாரணை நடத்தியது. அப்போது, ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்காக ஏன் வெளிநாடு அழைத்துச் செல்லவில்லை என்று கேள்வி எழுப்பியது.

இந்த நிலையில், விசாரணை ஆணையம்  ஆளுநர் மாளிகைக்கு  கடிதம் எழுதி உள்ளது.  அதில், ஜெ. மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

அதில்,  ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எத்தனை மருத்துவ குறிப்புகள் ராஜ்பவனுக்கு அனுப்பப்பட்டது?

மருத்துவ அறிக்கைகள் பெறப்பட்டு இருப்பின் பொறுப்பு ஆளுநருக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டதா?

ஆளுநர் ஜெயலலிதாவை பார்த்துவிட்டு சென்ற பிறகு ராஜ்பவனில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு தகவல் அனுப்பப்பட்டதா?

ஜெயலலிதா உடல்நிலை, அவருக்கு அளித்த சிகிச்சை தொடர்பாக அப்பல்லோ, எய்ம்ஸ், ராஜ்பவன் இடையே கடிதத் தொடர்பு ஏதேனும் இருந்ததா?

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக ஆளுநருக்கோ, முன்னாள் தலைமை செயலாளருக்கோ அறிக்கை அனுப்பப்பட்டதா என்று கேட்டு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்பிருக்கிறது.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது எத்தனை மருத்துவ குறிப்புகள் வந்தன என்று கேட்டு ஆளுநர் மாளிகைக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜெயலலிதா உடல்நிலை, மற்றும் அவருக்கு அளித்த சிகிச்சை குறித்தும் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் ஆளுநர் மாளிகையிடையே கடிதத் தொடர்பு ஏதேனும் இருந்ததா என்றும் அதில் கேள்வி எழுப்பியிருப்பதாக கூறப்படுகிறது.

தலைமைச் செயலாளருக்கு ஆணையம் அனுப்பிய கடிதத்தில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த ஐந்து மருத்துவர்கள் அடங்கிய குழு அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்ததா என்று வினவப்பட்டுள்ளது.

ஜெயலலிதா உடல்நிலை குறித்தும் சிகிச்சை குறித்தும் அரசுக்கோ, ஆளுநருக்கோ, இந்திய அரசுக்கோ, அப்போதய முதல்வருக்கோ முன்னாள் தலைமை செயலாளர் அறிக்கை அளித்தாரா என்றும் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது பதிவான சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்காததால், வரும் 25 ஆம் தேதி ஆஜராகுமாறு அப்பல்லோ தலைமை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதனுக்கு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள சிசிடிவி சர்வர்களில் ஒரு மாதம் முதல் 45 நாட்கள் மட்டுமே சேமிக்க முடியும் என்றும், புதியதாக பதிவுகள் சேரும் பொழுது பழைய பதிவுகள் தானாக அழிந்து விடும் எனவும் அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.