ஜெ.மரணம்: விசாரணை ஆணையத்தில் சசி உறவினர் மருத்துவர் சிவக்குமார் 2வது முறை ஆஜர்

(டாக்டர் சிவக்குமார் – பைல் படம்)

சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் சிவக்குமார் இன்று 2வது முறையாக ஆஜர் ஆனார்.

இவர் சசிகலாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷனை தமிழ அரசு அமைத்தது. இந்த விசாரணை ஆணையம் ஜெ. மரணம் தொடர்பாக பலரிடம் விசாரணையை கடந்த அக்டோபர் மாதம் 25ந்தேதி முதல் நடத்தி வருகிறது.

முன்னாள் தலைமை செயலாளர்கள்  ஷீலா பாலகிருஷ்ணன்,  ராமமோகன் ராவ் மற்றும் சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள், பாதுகாவலர்கள், டிரைவர், உதவியாளர், சமையல்காரர் மற்றும்  ஜெ. உறவினர்களான  ஜெ.தீபா, தீபக், மாதவன் உள்பட அரசு மருத்துவர்கள், அப்பல்லோ மருத்துவர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு அவரதுவீட்டில்  சிகிச்சை அளித்து வந்தவரும், சசிகலாவின் உறவினருமான மருத்துவர் சிவக்குமாருக்கும் ஆணையம் சம்மன் அனுப்பியது. அதைத்தொடர்ந்து ஏற்கனவே கடந்த ஜனவரி 8ந்தேதி அவர் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில், மீண்டும் அவரை ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது.

அதைத்தொடர்ந்து,  மருத்துவர் சிவக்குமார் இன்று 2வது முறையாக நீதிபதி ஆறுமுகசாமியிடம் ஆஜராகி, தான் ஜெயலலிதாவுக்கு வழங்கிய மருத்துவ சிகிச்சை மற்றும் அதற்கான ஆதாரங்களை வழங்கியதுடன், தனக்குத் தெரிந்த தகவல்களையும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.