ஜெ. மர்ம மரணம்: ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை மேலும் நீட்டிப்பு

சென்னை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழகஅரசு நியமனம் செய்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் மேலும் நீட்டித்து உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுமார் 75 நாட்கள் அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென மரணம் அடைந்ததாக கூறப்பட்டது. இது மக்களிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, எடப்பாடி தலைமையிலான தமிழகஅரசு, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்தி வந்தது.

இந்த ஆணையம் அப்போலோ மருத்துவர்களை விசாரிக்க அழைத்த நிலையில், அப்போலோ தரப்பில் சரியான முறையில் ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை. இதற்கு ஆணையத்தின் நீதிபதி கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்த நிலையில், அப்போலோ தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி விசாரணைக்கு தடை கோரியது.

ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்த நிலையில், உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு கடந்த ஆண்டு  தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, ஆணையத்தின் மீதான தடை  பிப்ரவரி 24ஆம் தேதி  நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதேசமயம் , வழக்கு தொடர்பாக  அப்போலோ நிர்வாகம் தரப்பில் அவகாசம் கோரியதால் அதனை ஏற்ற உச்சநீதிமன்றம் விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டது.