சென்னை:

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும்  ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ஆஜர் இன்று 3வது முறையாக ஆஜரானார். அவரிடம்  சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை மேற்கொண்டார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்தவிசாரணை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த விசாரணை ஆணையத்தில் ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14ந்தேதி மற்றும் 20-ஆம் தேதி என  2 முறை ஆஜரான தமிழக  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இனறு 3-வது முறையாக ஆஜராகியுள்ளார்.

அவரிடம், அப்போலோ தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தியதாகவும், அதனைத் தொடர்ந்து சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் ஜெ.மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், ராதாகிருஷ்ணன்மீதும் குற்றச்சாட்டு தெரிவித்திருநதார்.

இந்த நிலையில், ராதாகிருஷ்ணனிடம் குறுக்கு விசாரணை நடைபெறுகிறது. அப்போது ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்லாத விவகாரம் குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன்  ஆணையத்தில் கேட்ட கேள்விகளுக்கு மனசாட்சிக்குட்பட்டு பதிலளித்தேன்  விசாரணை நடந்து கொண்டு இருப்பதால் இதற்குமேல் தன்னால் எதையும் கூற இயலாது என்றும் தெரிவித்தார்.