ஜெயலலிதா படத்தை அரசு விளம்பரத்தில் வெளியிட்டிருப்பது நீதிமன்ற அவமதிப்பு!:  ராமதாஸ்

ஜெயலலிதா படத்தை அரசு விளம்பரத்தில் வெளியிட்டிருப்பது உச்சநீதிமன்ற அவமதிக்கும் செயல் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அரசு விளம்பரத்தில் ஜெயலலிதா படம்

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“தமிழக அரசின் நலத்திட்டப் பணிகள் தொடக்க விழாவையொட்டி, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயலலிதா புகைப்படத்துடன் கூடிய முழுபக்க விளம்பரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவரின் படத்தை அரசு விளம்பரத்தில் வெளியிடுவது நீதிமன்றத்தை மட்டுமின்றி தமிழக மக்களையும் அவமதிக்கும் செயலாகும்.

தமிழ்நாட்டில் செயல்படுத்தி முடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நலத் திட்டங்கள் திறக்கப்படாமல் இருப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அத்திட்டங்களை உடனடியாக திறக்காவிட்டால், பாட்டாளி மக்கள் கட்சியினரே அவற்றைத் திறந்து வைப்பார்கள் என்றும் கடந்த மாதம் 4&ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்திருந்தேன். அதன்பின் சரியாக ஒரு மாதம் கழித்து அத்திட்டப்பணிகளை தமிழக முதல்வர் திறந்து வைப்பதில் மகிழ்ச்சி. காணொலி மூலம் நடத்தப்படும் திறப்பு விழாவுக்கு பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து விளம்பரம் வெளியிட வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. ஆனாலும் அரசு விளம்பரங்கள் பக்கம்பக்கமாக வெளியிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படத்துடன், ஊழல் குற்றவாளி ஜெயலலிதா படமும் இடம்பெற்றுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவை குற்றவாளி என அறிவித்ததுடன், அவர் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்; ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை கடந்த மாதம் உச்சநீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது. அதுமட்டுமின்றி, பொதுவாழ்வில் ஊழலை ஒழிப்பதற்காக குடிமக்கள் அனைவரும் போராட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் இருந்து ஜெயலலிதாவின் உருவப்படங்களை உடனடியாக அகற்ற வேண்டும்; அம்மா திட்டங்கள் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பெயர்களை அரசுத் திட்டங்கள் என்று மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.இதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு அரசுக்கு அறிவிக்கையும் அனுப்பப்பட்டிருக்கிறது.

ராமதாஸ்

இவ்வளவுக்குப் பிறகும் சென்னையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜெயலலிதா படத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மலர் மரியாதை செய்திருக்கிறார். அத்துடன் ஜெயலலிதா படத்துடன் முழுப்பக்க விளம்பரங்களையும் ஆட்சியாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள் என்றால், உச்ச நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை திட்டமிட்டு அவமதிக்கிறார்கள் என்று தான் பொருளாகும். ஊழலுக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிலையில், மக்கள் பணத்தை கொள்ளையடித்த ஒருவரின் படத்தை மக்களின் வரிப்பணத்தை செலவழித்து விளம்பரத்தில்  வெளியிடச் செய்வது ஊழலை ஊக்குவிக்கும் செயலாக அமையுமே தவிர, ஊழலை ஒழிக்க உதவாது.

அதுமட்டுமின்றி,  எந்த பதவியிலும் இல்லாத ஜெயலலிதாவின் படத்தை தமிழக அரசின் விளம்பரத்தில் இடம் பெறச் செய்வது அரசு விளம்பரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மீறும் செயலாகும். அரசு விளம்பரங்கள் தொடர்பாக கடந்த 13.05.2015 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில்,‘‘ அரசு விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும். மற்ற எவரின் படங்களும் இடம்பெறக்கூடாது’’ என்று கூறப்பட்டிருந்தது. அத்தீர்ப்பில் மாற்றம் செய்து 18.03.2016 அன்று அளித்த தீர்ப்பில் மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் ஆகியோரின் படங்களும் இடம்பெறலாம் என்று சலுகை அளித்தது. அதே நேரத்தில் அரசு விளம்பரங்களில் மற்றவர்களின் படங்களை போடக்கூடாது என்ற முந்தைய நிபந்தனை செல்லும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பி.சி.கோஷ் அறிவுறுத்தினர்.

ஆனால், தமிழக அரசில் எந்த ஒரு பதவியிலும் இல்லாத ஜெயலலிதாவின் படத்தை விளம்பரத்தில் வெளியிட்டிருப்பது உச்சநீதிமன்ற அவமதிப்பாகும். ஊழலை உயர்த்திப் பிடிக்கும் தமிழக அரசின் இந்த செயலையும், அதற்கு தமிழக அரசின் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் போன்ற நேர்மையான அதிகாரிகள் துணை போவதையும் ஏற்க முடியாது. இதுபோன்ற செயல்கள் இனியும் நடக்காத வண்ணம் தடுப்பதற்கான எச்சரிக்கையாக, இந்த விளம்பரத்திற்கான செலவுத் தொகை முழுவதையும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடமிருந்து வசூலிக்க ஆளுனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் இதற்காக உச்சநீதிமன்றத்தை அணுகவும் பா.ம.க. தயாராக உள்ளது” –  இவ்வாறு தனது அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.