ஜெ.தூக்க நிலையிலேயே இருந்தார்: ஜெ. உடல்நிலை குறித்து பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவ் கடிதத்தில் தகவல்

சென்னை:

ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தூக்க நிலை யிலேயே இருந்ததாக, அப்போதைய தமிழக  பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் குடியரசு தலைவருக்கு கு எழுதி உள்ள கடிதத்தில் தெரிவித்து உள்ளார். இந்த கடித விவகாரம் தற்போது வெளியாகி பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு, செப்டம்பர் 22 ம் தேதி, தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பலகட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் நலமோடு இருப்பதாக அப்போலோ மருத்துவ மனையும், தமிழக அரசும் தெரிவித்து வந்த நிலையில், டிசம்பர் 5 ம் தேதி ஜெயலலிதா இறந்தார்.

இதைத்தொடர்ந்து, தமிழக அரசு, ஜெயலலிதா மரணம் குறித்த கடந்த 2017ம் ஆண்டு  செப்டம்பர் மாதம் விசாரணை ஆணையத்தை அமைத்தது.  அதைத்தொடர்ந்து நவம்பர் 22ந்தேதி முதல் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் தனது விசாரணையைத் தொடங்கி நடத்தி வருகிறது. இந்த ஆணையம் இதுவரை 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்திய நிலையில், அப்போதைய ஆளுநரிடமும் பதில் கோரியிருந்தது.

கடந்த மாதம் 19ம் தேதி ஆளுநர் மாளிகைக்கு விசாரணை ஆணையம்  அனுப்பிய கேள்வி பதில் பட்டியலை அனுப்பி, விளக்கம் அளிக்குமாறு கேட்டிருந்தது.

இதற்கு பதில் தெரிவித்துள்ள கவர்னர் மாளிகை, ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்தபோதும், ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகும், அதுகுறித்து ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ், குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதங்களின் நகல்களையும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு வழங்கி யுள்ளது.

அந்த கடிதங்களில் வெளியாகி உள்ள விவரங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அதில், ஜெயலலிதா உடல்நிலை குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகத் தொடங்கி யதாலும், சமூகவலைத்தளங்களில் வதந்திகள் பரவத் தொடங்கியதாலும், 2016ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி மாலை அப்போலோ மருத்துவமனை  சென்று ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, அப்பலோ தலைவர் மற்றும் மருத்துவர்களிடம் விசாரித்ததாக  அந்த கடிததத்தில் அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்து உள்ளார்.

மேலும்,  ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வார்டுக்கு சென்று பார்த்ததாகவும், அப்போது அவர்  தூக்க நிலையில் இருந்ததாகவும் , 1.10.2016 அன்று அப்போலோவில் ஜெயலலிதாவை பார்த்தபோது அவர் உணர்வற்ற நிலையில் இருந்தார்  என்று ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக 6.10.2016 அன்றும்  ஜனாதிபதிக்கு அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதம் தற்போது வெளியாகி உள்ளது. அப்போலோ மருத்துவமனை வட்டாரமும், தமிழக அரசும் ஜெ. நலமோடு இருக்கிறார் என்றும், இட்லி சாப்பிட்டார், ஜூஸ் குடித்தார் என்று கூறி வந்த நிலையில், கவர்னர் கடிதத்தில் ஜெ. தூக்க நிலையிலேயே இருந்ததாக தெரிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.