சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த வீடியோவை டிடிவி ஆதரவாளரான வெற்றிவேல் வெளியிட்டார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில்  ஜெ.சிகிச்சை வீடியோ வெளியிட சொன்னது டிடிவிதான் என்று டிடிவியின் தீவிர ஆதரவாளர்க ளின் ஒருவரான  ராஜசேகரன் பகிர் தகவலை தெரிவித்து உள்ளார்.

இதன் காரணமாக சசிகலா குடும்பத்தினர் உண்மைக்கு மாறாக பொய்களை தொடர்ந்து சொல்லி வருவது மீண்டும் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 20ந்தேதி அன்று ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் இருந்த போது எடுக்கப்பட்டதாக சொல்லும் வீடியோ காட்சி ஒன்றை டிடிவி. தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார்.

அப்பாது,  தான் வீடியோவை வெளியிடுவது தினகரனுக்குத் தெரியாது என்றும் ஜெயலலிதா பற்றி அவதூறு பரப்புவதை தாங்க முடியாமலுமே வீடியோவை வெளியிடுவதாக வெற்றிவேல் கூறினார்

தினகரனும், வெற்றிவேலிடம் வீடியோவைக் கொடுத்தது தான் தான் என்றும் ஆனால் அவர் வீடியோவை வெளியிடுவார் என்று நினைக்கவில்லை என்றும் கூறினார். 

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டது வேதனை அளிப்பதாக இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியாயும் கூறி இருந்தார்.

விவேக்கும், தானும் தான் அந்த வீடியோவை சசிகலா சொன்னதன் பேரில் தினகரனிடம் அளித்ததாகவும், விசாரணை ஆணையம் கேட்டால் சமர்ப்பிக்கவே கொடுத்தோம் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், டிடிவி தினகரன் சொல்லித் தான் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது எடுக்கப்பட்ட வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டார் என்று  முன்னாள் எம்எல்ஏவும், தினகரன் ஆதரவாளருமான ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜசேகரன்,  ஜெயலலிதா வீடியோவை வெற்றிவேலிடம் கொடுத்து வெளியிடச் சொன்னது தினகரன் தான். வெற்றிவேல் கூட தயங்கினார். ஆனால், நான்தான் அவருக்கு  தைரியம் சொன்னேன் என்றும், என்ன செய்வார்கள்… வழக்குதானே போடுவார்கள்… போட்டால் பார்த்துக் கொள்ளலாம் என்று அவருக்கு தைரியம் கொடுத்தேன் என்றும், அதைத்தொடர்ந்தே வெற்றிவேல் அந்த வீடியோவை வெளியிட்டார் என்று கூறினார்.

மேலும், ஆர்கே நகர் தேர்தலில் இரண்டரை லட்சம் வாக்காளர்களுக்கும் 6 ஆயிரம் வீதம் அதிமுகவினர் பணம் கொடுத்து விட்டார்கள் என்ற தகவல் கிடைத்தது.

எனவே, நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில்  20 ரூபாய் டோக்கன் கொடுத்து, பணம் கண்டிப்பாக கிடைக்கும் என்று கூறினோம்… அதற்கு நல்ல பலன் கிடைத்தது என்றும் கூறினார்.

டிடிவி ஆதரவாளரான  ராஜசேகரன் இவ்வாறு பேசி இருப்பது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.