அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெ.வை உயிருடன் இருக்கும்போது ஒருமுறை கூட நான் பார்க்கவில்லை: ஓபிஎஸ் பகீர் தகவல்

சென்னை :

றைந்த தமிழக முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 70 நாட்களுக்கும் மேலாக  சிகிச்சை பெற்று வந்தபோது, நான் ஒரு முறை கூட  நான்  அவரை  பார்க்கவில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிதித்துறை கருவூலம் மற்றும் கணக்குத்துறை, உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை, கூட்டுறவு தணிக்கைத் துறையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஊதியதாரர்களுக்கு அடையாள அட்டை மற்றும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் பேசியது, காவிரி விவகாரம்  குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்து துணைமுதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது :

பாஜக தேசிய செயலாளர் முரளிதரராவ் காவிரி விவகாரம் பற்றி கூறியிருப்பது  அவருடைய சொந்த கருத்து.  அரசு சரியான நடவடிக்கை எடுத்து வருகிறது.  காவிரி விவகாரத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்து வருகிறது. மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு சில விளக்கங்களை கேட்டுள்ளது, காவிரி நடுவர் மன்ற இறுதிஆணையின்படி சட்டப்பூர்வ அமைப்பான காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவை அமைப்பதற்கான ஸ்கீமை தெரியப்படுத்துங்கள் என்று உச்சநீதிமன்றம் கேட்டிருக்கிறது.

ஆனால் காவிரி விவகாரத்தில்   தமிழகத்தில் தேவையற்ற ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. இதனை மக்கள் விரும்பவில்லை என்று கூறினார்.

அருப்புக்கோட்டை பேராசிரியை  நிர்மலாதேவி பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ்,  விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் உண்மை நிலை தெரியவரும் என்றார்.

முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் கூறி உள்ள தகவல் பற்றிய கேள்விக்கு,  ஜெயலலிதாவை பார்க்கவில்லைநான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன்  என்றார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கின்ற நேரத்தில் அவரை நான் பார்க்கவில்லை. அவர் உயிரோடு இருக்கும் வரை நான் பார்க்கவில்லை, பார்க்கவில்லை, பார்க்கவில்லை என்று மூன்று முறை ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ந்தேதி உடல்நலமில்லாமல் சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 75 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர், டிசம்பர் 5தேதி மரணம் அடைந்ததாக கூறப்பட்டது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தது.  ஜெ.சிகிச்சை குறித்து எந்தவொரு உண்மையான தகவலும், சிகிக்சை குறித்த படமோ வெளியாகாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது. இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

ஜெ.மருத்துவமனையில் இருந்தபோது, அவருடைய துறையையும் கூடுதலாக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்தான் கவனித்து வந்தார். தினசரி மருத்துவமனையிலும் இருந்தார். ஆனால், அவர் தான் ஜெ.வை மருத்துவமனையில் சந்திக்க சசிகலா அனுமதிக்கவில்லை என்று கூறி, சசிகலாவை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில், ஜெ.மரணம் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில், 2016 செப்டம்பர் மாதம் அப்பலோ மருத்துவமனையில் நடைபெற்ற காவிரி விவகாரம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார் என்று முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் கூறி இருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை யாருமே பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்று அமைச்சர்கள், முதல்வர் கூறி வருகின்றனர். ராமமோகன் ராவ் சசிகலாவை சொல்படி பேசி வருகிறார் என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ்,   ஜெயலலிதா மருத்துவமனையில் உயிருடன் இருந்த வரை பார்க்கவே இல்லை என்று ஆணித்தரமாக கூறியுள்ளார். இது ஜெ.மரணத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.