வெள்ளை அறிக்கை வெளியிட்டால் ஜெயலலிதா உயிரோடு வருவாரா? திருநாவுக்கரசர்

சென்னை,

வெள்ளை அறிக்கை வெளியிட்டால் மட்டும் ஜெயலலிதா உயிரோடு வந்து விடுவாரா? திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பினார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 5ந்தேதி இரவு மரணமடைந்தார். அவரது மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைக்குறிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இதுகுறித்து அரசியல் கட்சியினரும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடும்படி கோரியிருந்தார்.

இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது,

 

500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் நரேந்திரமோடியின் அறிவிப்பால்  கடந்த 2 மாதங்களாக  மக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தர மறுக்கி றார்கள்.

ஆனால், சேகர் ரெட்டியிடம் மட்டும் புதிய ரூபாய் நோட்டுகள் கோடிக்கணக்கில் சென்றது எப்படி? மேலும் பொதுத்துறை வங்கிகளை காட்டிலும் தனியார் வங்கிகளுக்கு மட்டும் கூடுதலாக பணத்தை அனுப்பி வைக்கிறார்கள்.

இதுபோன்ற மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் தெருமுனை பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு செய்து இருக்கிறோம்.

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான சொத்துகள் நிறைய உள்ளன. ஆனால் அவற்றில் பல சிலரின் வசம் இருக்கிறது. இதுபோன்ற சொத்துகளை மீட்கும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சொத்து மீட்பு மற்றும் பாதுகாப்பு குழு அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– ஜெயலலிதாவின் மரணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறதே?

பதில்:– முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா மிகப்பெரிய தலைவர். மத்தியில் ஒரு ஆட்சியை உருவாக்கவும், அந்த ஆட்சியை அப்புறப்படுத்தவும் கூடிய வலிமையை பெற்றவராக விளங்கியவர். கோடான கோடி தொண்டர்களின் தலைவராக திகழ்ந்தவர். அவரின் திடீர் மறைவு துரதிருஷ்டவச மானது. அவரின் மறைவுக்கு பிறகு வரும் வதந்தி தேவையற்றது.

அவருக்கு சிகிச்சை கொடுத்த ஆஸ்பத்திரி புகழ் பெற்றது, அவருக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ் டாக்டர்கள், லண்டன் டாக்டர்கள் சிகிச்சை அளித்து இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமா பொய் சொல்கிறார்கள்? இதை நான் நம்பவில்லை.

வெள்ளை அறிக்கையாக இருந்தாலும், கருப்பு அறிக்கையாக இருந்தாலும் அதை வெளியிட்டால் மட்டும் ஜெயலலிதா உயிருடன் வந்து விட போகிறாரா?. அவரின் மரணம் குறித்து வதந்தி அவசியம் இல்லாதது.

கேள்வி:– நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறதே?

பதில்:– பூரண மதுவிலக்கு என்பது தான் காங்கிரஸ் கட்சியின் கொள்கை. அனைத்து மதுக்கடைகளையும் அகற்ற வேண்டும் என்று தான் நாங்கள் போராடி வருகிறோம். தமிழக அரசு முதலில் 500 மதுக்கடைகளை அகற்ற முடிவு செய்தார்கள். அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் இல்லை, பேச்சும் இல்லை.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.