ஜெயலலிதா சொத்துக்கள் தேசிய மயமாக்கப்பட வேண்டும்! திருநாவுக்கரசர்

சென்னை,

றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்றும், அவரது வீட்டை நினைவாலயமாக மாற்ற வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு  ரூ.113 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் வங்கியில் சேமிப்பாக  உள்ளது என்று அவர் வேட்புமனு தாக்கலின்போது தெரிவித்திருந்தார்.

தற்போது அந்த சொத்துக்கள் யாருக்கு போய் சேரும் என்று மக்களிடையே விவாதம் நடைபெற்று வருகிறது. அதேபோல் ஜெயலலிதா வாழ்ந்து வந்த அவரது 100கோடி மதிப்புள்ள  போயஸ் கார்டன் பங்களா என்னவாகும் என்று தெரியவில்லை. ஆனால், தற்போதும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அங்கேயே இருந்து வருகிறார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:-

 

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் இல்லம்  நினைவாலயமாக மாற்றப்பட வேண்டும் என்றும்,  ஜெயலலிதா நிறைய புத்தகங்கள் சேகரித்து வைத்துள்ளார். சினிமா உலகிலும், அரசியல் உலகிலும் நிறைய விருதுகள் வாங்கியுள்ளார்.

ஜெயலலிதா பெற்ற அந்த விருதுகளும், புத்தகங்களும் அந்த நினைவாலயத்தில் பாதுகாத்து வைக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் மத்தியில் ஜெயலலிதாவுக்கு அபரிதமான ஆதரவும் வரவேற்பும் இருந்தது. எனவே ஜெயலலிதா இல்லத்தை நினைவாலயமாக மாற்றியதும், அதை பெண்கள், பொதுமக்கள் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும், ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களும் தேசிய மயமாக்கப்பட வேண்டும் என்றும், அவரது சொத்து விவரங்கள் அதிகாரப்பூர்வமாக பொதுமக்கள் அறியும் வகையில் வெளியிடப்பட வேண்டும் என்றும் கூறினார்.

ஜெயலலிதாவின் உடமைகளில் ஒரு சிறு பகுதியையாவது அவரது அண்ணன் மகன் தீபக், மகள் தீபாவுக்கு பிரித்து கொடுக்கப்பட வேண்டும். சட்டப்படியும், தர்மப்படியும் அதுதான் சரியானதாக இருக்கும்.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

எம்ஜிஆர் வசித்த தி.நகர் வீடு தற்போதும், நினைவாலயமாக இருப்பதுபோல, ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தையும் நினைவாலய மாக மாற்றி, அவர் பற்ற வெற்றிகள், விருதுகள் போன்றவை அங்கே பேணி பாதுகாத்து வர வேண்டும் என்றும் பொதுமக்கள் கூறி வருகின்றனர்.