சென்னை:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் விழாவை அதிமுக.வினர் இன்று கொண்டாடி வருகின்றனர். இந்த விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவ வெங்கலச் சிலை திறப்பு விழா மற்றும் அதிமுக அதிகாரப்பூர்வ நாளிதழ் ‘நமது புரட்சித் தலைவி அம்மா’ அறிமுக விழாவும் நடந்தது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிலையை திறந்துவைத்து, நாளிதழையும் அறிமுகம் செய்தனர். இதில் அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள், மூத்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஜெயலலிதா சிலை திறக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே பெரும் சர்ச்சை ஏற்பட தொடங்கியுள்ளது.

சிலையில் ஜெயலலிதாவின் முகமே இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜெயலலிதா அணிவது போன்ற புடவை, அவர் இரட்டை விரல்களை உயர்த்தி காட்டுவது போன்ற அமசங்கள் மட்டுமே ஜெயலலிதாவை போல் உள்ளது. ஆனால், முகத்தை பார்க்கும் போது அது ஜெயலலிதா தான் என்பதை யாரும் ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர். சமூக வலை தளங்களில் இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

முகம் நடிகை காந்திமதியை போல் உள்ளது. வளர்மதியை போல் உள்ளது. சசிகலாவை போல் உள்ளது என்று ஆளாளுக்கு ஒரு பெயரை பதிவிட்டு வருகின்றனர். சிலையில் முகத்தை உற்று பார்த்தால் நமக்கே அந்த சந்தேகம் தான் எழுகிறது. இது சிலை வடிவமைத்த சிற்பியின் குற்றமா? அல்லது இதில் சதி எதுவும் இருக்கிறதா? என்ற சந்தேகமும் கட்சி தொண்டர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஒரு முறை பார்த்தவுடனேயே சிலையில் உள்ள இந்த வித்தியாசம் உடனடியாக தெரிந்துவிடுகிறது. இது எப்படி முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுக்கு தெரியாமல் போனது? என்று அதிமுக.வினர் கேள்வி எழுப்புகின்றனர். ஜெயலலிதாவின் மரணம் தற்போது வரை புரியாத புதிராக இருப்பதோடு பல்வேறு சர்ச்சைகளையும் எழுப்பி வருகிறது. தற்போது அவரது சிலையும் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.