மேயர் தேர்தல்: தான் போட்ட சட்டத்தை தானே திருத்தினார் ஜெ.

சென்னை:

மேயர்கள் தேர்வு முறையில் மாற்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கான இடதுக்கீடு உள்ளிட்ட மாநகராட்சி சட்ட திருத்தம் குறித்த சட்டமுன் வடிவை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

மேயரை கவுன்சிலர்கள் தேர்வு செய்யலாம் என்று திமுக ஆட்சி காலத்தில் இருந்த சட்டத்தை மக்களே நேரடியாக தேர்தல் மூலம் தேர்வு செய்யும்படியாக  2011ம் ஆண்டு புதிய சட்டத்தை கொண்டு வந்தவர் ஜெயலலிதாதான்.

தற்போது மீண்டும் கவுன்சிலர்களே மேயர்களை தேர்வு செய்யலாம் என்று சட்டத்திருத்தம் கொண்டுவந்திருக்கிறார்.

இன்று சட்டப்பேரவையில் இதற்கான சட்டத்திருத்தத்தை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்தார்.  இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்தபோது திமுக உறுப்பினர் மா. சுப்பிரமணியன், தி.மு.க. சார்பாக இதை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக தெரிவித்தார். சபாநாயகர் தனபால் அவரது கருத்தை பதிவு செய்து கொள்வதாக கூறினார்.

j

“ சில மாநகராட்சிகளில் மாமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவ்வளவாக மாநகராட்சி மேயருக்கு இல்லாத காரணத்தால், மாமன்றங்கள் முறையாக செயல்படுவதில்லை. எனவே, மாமன்ற உறுப்பினர்கள் மறைமுகமாக மேயர்களை தேர்ந்தெடுப்பது என அரசு முடிவு செய்துள்ளது” என்று ஆளுங்கட்சி வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

“கடந்த டிசம்பர் மாதம் சென்னை கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பு இன்றி திடுமென திறந்துவிட்டது என்று ஆளும் கட்சி மீது புகார் கூறப்பட்டது. தவிர வெள்ள நிவாரண பணிகள் குறித்தும் ஆளுங்கட்சி மீது அதிருப்தி நிலவியது. இதன் எதிரொலியாக  சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை பகுதியில் அ.தி.மு.கவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆகவே வரும் உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி கிடைக்காது என்கிற எண்ணத்தில் சட்டத்தை மாற்றியிருக்கிறார்கள்” என்று எதிர்க்கட்சிகள் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.