சென்னை:

றைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர்  விசாரணைக்கு ஆஜராக சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஜெயலலிதா மறைவைத்தொடர்ந்து, அவரது  சொத்துக்களை பராமரிக்க ஒருவரை நியமிக்க வேண்டும் என்று அதிமுக பிரமுகர் புகழேந்தி, ஜனார்த்தனன் ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.  இந்த வழக்கு ‘ நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, ஜெயலலிதாவின் சொத்து விவரம், அதன் மதிப்பு, அவர் செலுத்த வேண்டிய வரி பாக்கி போன்றவை குறித்து விவரம் தெரிவிக்கக் கோரி சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதியை நிர்வாகியாக நியமிக்க வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட ஜெயலலிதா மறைவிற்கு பின் போயஸ் தோட்ட இல்லம் யார் கட்டுப் பாட்டில் இருக்கிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.  அப்போது பேசிய வழக்கறிஞர், ஜெயலலிதா இல்லம் நினைவில்லமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தற்போது மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாடில் இருக்கிறது என்றார்.

இதையடுத்து பேசிய தீபா, தீபக் தரப்பு வழக்கறிஞர்கள், தங்களுக்கு போயஸ் தோட்ட இல்லத்தில் அனுமதி மறுக்கப்படுகிறது. ஆட்சியர் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் வேறு சிலரும் தங்கி உள்ளனர் என்று கூறினர்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற வாதங்களை அடுத்து,  வரும் 30ஆம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு தீபா மற்றும் தீபக் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.