“ஜெயலலிதா மற்றும்  சல்மான்கான் ஆகியோர் மீதான வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளால் நீதிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது” என்று  உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே  கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

ஜெயலலிதா - சல்மான்கான்
ஜெயலலிதா – சல்மான்கான்

“இரண்டு வழக்குகள் நீதித்துறைக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டன. ஒன்று ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு. அதில் 14 வருடங்களுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. ஆனால், ஜாமீன் கிடைக்கவில்லை.  பின்னர், உச்சநீதிமன்றத்துக்கு சென்றார்கள். அடுத்த சில தினங்களில் ஜெயலலிதாவுக்கு பெயில் கிடைத்தது.
நடிகர் சல்மான் கான் மீதான வழக்கும். 14 ஆண்டுகளுக்கு பிறகு முதல் நீதிமன்றம் அதில் தீர்ப்பளித்தது. தீர்ப்பு வந்த அடுத்த ஒரு மணிநேரத்திற்குள் உயர்நீதிமன்றம்  ஜாமீன் வழங்கிவிட்டது.
ஜாமீன் வழங்குவதை நான் தவறென்று சொல்லவில்லை.  ஒருவர் நாளை தூக்கில் போடப்பட இருக்கிறார் என்றாலோ,  மாணவர்களுக்கு நாளை தேர்வு நடைபெறும் நிலையில்  இன்றுவரை ‘ஹால் டிக்கெட்’ கொடுக்கவில்லை என்றாலோ அதை அவசர வழக்காக எடுத்து, உடனடியாக தீர்ப்பு வழங்கலாம். ஜாமீன் வழங்கலாம்
ஆனால், இந்த இரு வழக்குகளும் பணபலம் மற்றும் அதிகாரம் காரணமாகவே உடனடியாக விசாரிக்கப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு  ஜாமீன் வழங்கப்பட்டது. வழக்கில் தொடர்புடையவர்கள் நடைமுறைக்கு புறம்பாக உடனடியாக வழக்கை விசாரிக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.
சந்தோஷ் ஹெக்டே
சந்தோஷ் ஹெக்டே

இதை முழுவதுமாக எதிர்க்கிறேன், கண்டிக்கிறேன்.. இந்த வழக்குகளை உடனடியாக விசாரிக்கும் அளவிற்கு எதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது  என்று மக்கள் கேட்கிறார்கள்.
இந்த இரு வழக்கின் தீர்ப்புகளும் நீதிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டன என்பது உண்மை!” என்று சந்தோஷ் ஹெக்டே பேசினார்.
அவரது பேச்சு நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.