தமிழக முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா  உடல்நலம்  குன்றி  அப்போலோ  மருத்துவமனையில் கடந்த (2016) செப்டம்பர் 22ம் தேதி  அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பலனின்றி கடந்த (2016) டிசம்பர் 5ம் தேதி மரணமைடந்ததாக அறிவிக்கப்பட்டது.

அந்த செப்டம்பர் 22 முதல் டிசம்பர் 5 வரை நடந்தவை.. அதாவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவை என்ன?

 

செப்டம்பர் 22: இரவு 9.30 மணிக்கு, ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் இல்லத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அப்போலோ மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

செப்டம்பர் 23: ‘முதலமைச்சர் ஜெயலலிதா, சாதாரண காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவால் ஏற்பட்ட உடல்சோர்வுக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருக்கிறார்’ என்ற அப்போலோ மருத்துவமனை  தனது முதல் அறிக்கையை வெளியிட்டது.

‘முதல்வர் ஜெயலலிதாவோடு கொள்கை அளவில் வேறுபட்டாலும், விரைவில் அவர் உடல்நலம் பெற்று பணியினைத் தொடர வாழ்த்துகிறேன்’ என்று தி.மு.க தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். மேலும், ‘முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டும்’ என்று பிரதமர் நரேந்திர மோடி, தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தார்கள்.

செப்டம்பர் 25:  ஜெயல்லிதாவின்  உடல்நிலை குறித்தும் பல்வேறு யூகச் செய்திகள் கிளம்பின. மேலும், சிகிச்சைக்காக அவர் வெளிநாடு செல்ல இருக்கிறார் என்றும் தகவல்கள் கிளம்பின.

‘‘ஜெயலலிதா ஓரிரு நாட்களில் வீடு திரும்பி, பணிகளை மேற்கொள்வார். வெளிநாட்டுச் சிகிச்சை அவருக்கு அவசியம் தேவையில்லை’’ என அப்போலோ மருத்துவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

செப்டம்பர் 27: ‘அப்போலோ மருத்துவமனையில் காவிரிப் பிரச்னை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர்  ஆலோசனை நடத்தினார்’ என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது.

செப்டம்பர் 30: ‘முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவமனையில் இருந்து இன்னும் சில நாட்களில்  தன் பணிகளுக்குத் திரும்புவார்’ என அப்போலோ மருத்துவமனை அடுத்த அறிக்கையை வெளியிட்டது.

‘ஜெயலலிதா உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் வருவதால், அவருடைய சிகிச்சைபெறும் படத்தை வெளியிட வேண்டும்’ என தி.மு.க தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டார்.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க, லண்டனில் இருந்து பிரபல மருத்துவர் ரிச்சர்ட் பியெல் சென்னை வந்தார்.

மருத்துவர் ரிச்சர்ட்

அக்டோபர் 1: ஜெயலலிதாவை நலம் விசாரிக்க அப்போலோ மருத்துவமனைக்கு தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் வருகை புரிந்தார். பிறகு  ‘முதல்வர் உடல்நலம் தேறிவருகிறார்’ என்று அறிக்கை வெளியிட்டார்.

லண்டனில் இருந்து வந்த மருத்துவர் ரிச்சர்ட் பியெல் ஆலோசனைப்படி ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனை செய்திக்குறிப்பு வெளியிட்டது.

வித்யாசாகர்

அக்டோபர் 3:  ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் முன்னாள் ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி, ‘ஜெயலலிதா அபாயகட்டத்தைத் தாண்டி விட்டார்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், ஜெயலலிதாவை  நலம் விசாரிக்க அப்போலோ வந்தார்.

அக்டோபர் 5: ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி.சி.கில்நானி, மயக்க மருத்துவ நிபுணர் டாக்டர் அஞ்சன் த்ரிகா, இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் நிதிஷ் நாயக் ஆகியோர் சென்னைக்கு வந்தார்கள்.

அக்டோபர் 6: சிகிச்சை பெற்றுவரும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து புகைப்படத்துடன் கூடிய விவரங்களை வெளியி ட வேண்டும் என்று  சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

‘ஜெயலலிதா இன்னும் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது’ என்று அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

‘மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது அத்தை ஜெயலலிதாவை  பார்க்கவிடாமல் தான் தடுக்கப்படுவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குற்றம்சாட்டினார்.

ராகுல் காந்தி

அக்டோபர் 7: ‘ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து நேரடியாக வந்து கேட்டு அறிவதற்காக அப்போலோ மருத்வதுமனைக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வநதார்.

தமிழகத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல் படுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு பா.ஜ.க.  மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதினார்.

அக்டோபர் 8: ‘ஜெயல்லிதாவுக்கு நுரையீரல் பிரச்னை, செயற்கை சுவாசம், பாஸிவ் பிசியோதெரபி, நோய்த்தொற்றுப் பிரச்னைகள் இருக்கின்றன’ என்று அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

மு.க. ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார்.

மேலும் வைகோ, இரா.முத்தரசன் உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் அப்போலோவுக்கு வந்து சென்றனர்.

அக்டோபர் 10: மத்திய அமைச்சராக இருந்த வெங்கய்ய நாயுடு அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் அப்போலோவுக்கு வந்தார்.

அக்டோபர் 11:  ‘முதல்வர்  ஜெயலலிதாவின் துறைகளை, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார்’ என்று தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவித்தார்.

அக்டோபர் 12: ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரிக்க பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி,  இல.கணேசன் எம்.பி. ஆகியோர் அப்போலோ மருத்தவமனைக்கு வந்தனர்.

அக்டோபர் 13: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையைக் கண்காணிக்க டில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு மீண்டும் சென்னை வந்தது.

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக ஏழு பேரை தமிழக காவல்துறை கைது செய்தது.

அப்போலோ மருத்துவமனைக்கு வந்த கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள், சசிகலாவை சந்தித்து ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரித்தார்.

ரஜினி

அக்டோபர் 16:  நடிகர் ரஜினிகாந்த் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து சென்றார்.

அக்டோபர் 19: அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி நெல்லிக்குப்பம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கப்பூரில் இருந்து பிசியோதெரபி மருத்துவர்கள் குழு வந்தது.

அக்டோபர் 21:  ‘ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் பேசுகிறார்’ என்று அப்போலோ மருத்துவனை தெரிவித்தது.

நவம்பர் 4: ‘‘முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து வருகிறார். தன்னைச் சுற்றி நடப்பவை பற்றி அறிந்துகொள்கிறார். மருத்துவமனையில் இருந்து எப்போது வீடு திரும்புவது என்பதை அவரே முடிவு செய்வார்’’ என்றார் மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி ரெட்டி, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நவம்பர் 12:   அனைவரது பிரார்த்தனைகளால்தான் நான் மறுபிறவி எடுத்துள்ளேன் என முதல்வர் ஜெயலலிதா பெயரில் அறிக்கை வெளியானது.

நவம்பர் 19:  ‘‘செயற்கை சுவாச உதவி இல்லாமல் ஜெயலலிதா சுவாசிக்கிறார்’’ என்று அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்தார்.

‘‘ஜெயலலிதா தீவிரச் சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்’’ என்று அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர்கள் அறிவித்தனர்.

நவம்பர் 21: ஜெயலலிதாவின் இதயநோய், தொற்றுநோய் போன்றவற்றுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருவதாக தெரிவிக்கப்பட்டது.

நவம்பர் 25: ‘‘ஜெயலலிதா 90 சதவிகிதம் தாமாகவே சுவாசிக்கிறார். அவருக்கு ‘ட்ராக்யோஸ்டமி’ செய்யப்பட்டிருப்பதால், சிறிய ஸ்பீக்கர் உதவியுடன் பேசுகிறார்’’ என பிரதாப் சி ரெட்டி கூறினார்.

டிசம்பர் 4:  ‘‘முதல்வர் பூரணமாக நலமடைந்து வருகிறார். அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்று  அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேட்டி அளித்தார்.

முதல்வருக்கு திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட்டதால் இதயநோய் மற்றும் நுரையீரல் நோய் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதாக அப்போலோ அறிக்கை வெளியிட்டது.

முதல்வர் உடல்நிலை மோசமாக உள்ள தகவல் பரவியது. இதையடுத்து  தமிழகம் முழுவதிலும் இருந்து  அ.தி.மு.க தொண்டர்கள் அப்போலோவுக்கு விரைந்தனர்.

தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அவசர அவசரமாக மகாராஷ்டிராவில் இருந்து சென்னை வந்தார். அப்போலோ சென்ற அவர், ஜெயல்லிதாவின் உடல்நிலை பற்றிக் கேட்டறிந்தார்.

டிசம்பர் 5: காலை 11 மணிக்கு அப்போலோ மருத்துவமனையில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்னை எதுவும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் விளக்கம் அளித்தார். மருத்துவர் கில்நானி தலைமையிலான 4 எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க டில்லியில் இருந்து சென்னைக்கு வந்தனர்.

மதியம் 1 மணி: ‘முதல்வர் ஜெயலலிதா இதயத்துடிப்பு முடக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவரது சுவாசம், இதய செயல்பாடு உதவிக்காக எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதல்வருக்கு மருத்துவ நிபுணர்களால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்று அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இரவு 11.30 மணி: சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா மரணமைடைந்துவிட்டதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது