அதிமுக தலைமை அலுவலகத்தில் 2நாளில் புதிய ஜெயலலிதா சிலை

சென்னை:

ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நிறுவப்பட்ட ஜெயலலிதா சிலை யின் முக அமைப்பு சரியில்லை என்று புகார் கூறப்பட்ட நிலையில், சிலை மாற்றப்படும் என இபிஎஸ், ஓபிஎஸ் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், தற்போது புதிய சிலை தயாரான நிலையில், இன்னும் 2 நாளில் பழைய சிலை எடுக்கப்பட்டு அந்த இடத்தில் புதிய சிலை வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலை மாற்றப்படுகிறது..

ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா வின் முழுஉருவ வெண்கலச்சிலை எம்ஜிஆர் சிலை அருகில்  கடந்த பிப்ரவரி மாதம் 24ந்தேதி  திறக்கப்பட்டது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணைஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஜெ. உருவ சிலையை திறந்து வைத்தனர்.

ஆனால், திறக்கப்பட்ட சிலையில் உள்ள முகம் ஜெயலலிதாவின் முகம் அல்ல என்று அதிமுக தொண்டர்கள் கூறி வந்தனர். எதிர்க்கட்சியினரும் அதுகுறித்து கருத்துக்கள் கூறி வந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக,  சிலைக்கு கீழே ஜெ.ஜெயலலிதா என போர்டு வையுங்கப்பா என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து ஜெ. சிலையின் முகம் மாற்றப்படும் என்றும், வேறு சிலை நிறுவப்படும் என்றும் அதிமுக நிர்வாகிகள் கூறி வந்தனர்.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் முழுஉருவ புதிய சிலை தயார் செய்யப்பட்டு உள்ளது. இந்த சிலையை இன்னும் ஓரிரு நாளில், அதிமுக தலைமை அலுவலகத்தில் தற்போது உள்ள பழைய சிலையை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக புதிய சிலை அமைக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.