சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட இல்லமான  வேதா நிலையம்,  நினைவு இல்லமாக மாற்றப்பட்ட நிலையில், வரும் 28ந்தேதி பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்து உள்ளது. அன்றைய தினம் முதல்வர் முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி திறந்து வைக்கிறார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு  செப்டம்பர் 22ந்தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு, சுமார் 70 நாட்களுக்கும் மேலாக சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி,  டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார்.

மறைந்த ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவாலயமும், அவர் வசித்து வந்த போயஸ்கார்டனில் உள்ள வேதா நிலையம் என்ற பெயரிலான வீட்டை, நினைவு இல்லமாக  மாற்றப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு அறிவித்தார். அதையடுத்து, அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது.

போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக ரூ.68 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த தொகையையும் அரசு கோர்ட்டில் செலுத்தியது. இதறகு எதிர்ப்பு தெரிவித்து ஜெ.தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகளும் தள்ளுபடியானது. இதையடுத்து, போயஸ் தோட்ட இல்லம், நினைவில்லமாக மாற்றும் நடைபெற்று வந்தது. தற்போதுஅதற்கான பணிகள் முடிவடைந்து உள்ளதால், அதை பொதுமக்கள் பார்வைக்கு திறக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை வரும் 28 ஆம் தேதி காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளதாகவும், விழாவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜெயலலிதா  நினைவு இல்லத்தில் ஜெயலலிதா படித்த புத்தங்கள், பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு இடம்பெறும் என்றும், நினைவு இல்லம் திறக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை மெரினா கடற்கரை வளாகத்தில், எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள  ஜெயலலிதா நினைவிடம் வரும் 27ந்தேதி  திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

சசிகலா விடுதலையாகும் ஜனவரி 27ந்தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு… தமிழகஅரசு