ஜெ. போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக்குவதற்கு எதிராக டிராபிக் ராமசாமி வழக்கு! தமிழகஅரசுக்கு நீதி மன்றம் நோட்டீஸ்

--

சென்னை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ்கார்டன் பகுதியில் உள்ள வேதா நிலையத்தை , அரசுடமையாக்கி நினைவில்லமாக ஆக்கப்போவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இதை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி  தாக்கல் செய்த வழக்கில், 2 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என தமிழக அரசுஅறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  ஜெயலலிதாவின் வாரிசு என கூறிவரும், ஜெவின்  அண்ணன் மகள் தீபா, அவரது சகோதரர் ஜெ.தீபக் ஆகியோர், “ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அரசுடமையாக்கி நினைவில்லமாக்குவது தொடர்பாக தங்களை கேட்காமல் ஏதும் செய்யக்கூடாது என்றும், நாங்கள் ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

ஆனால், அரசு ஜெ. வீடு நினைவிடமாக்கப்படும் என ரஅரசு அறிவித்தது. ஆனால்,  சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றக்கூடாது என கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதுபோல ஜெ.தீபாவும் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில், இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, இது தொடர்பாக  2 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.