சென்னை: ஜெயலலிதாவின் இல்லத்தை நாளை திறக்க தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் அரசுடமையாக்கப்பட்டதை எதிர்த்து அவரது அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு மீது விசாரணை நடைபெற்று வந்தது.

அதே நேரத்தில் ஜெயலலிதாவின் இல்லத்திற்கான டெபாசிட் தொகையை செலுத்தியதால் அவரது இல்லம் அரசுடைமையாக்கப்பட்டதாக விளக்கம் அளித்த தமிழக அரசு, மக்கள் பார்வைக்காக வேதா இல்லத்தை நாளை  திறக்க உள்ளதாகவும் அறிவித்தது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தீபா, தீபக் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நாளை வேதா இல்லம் திறக்கப்பட உள்ள நிலையில் அங்குள்ள பொருட்களை முழுமையாக மதிப்பீடு செய்யாமல் அவசரமாக கையகப்படுத்தி இருப்பதாகவும், நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து மறு பரிசீலனை செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட நினைவு இல்லத்தை நாளை திறந்து வைக்க தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், வழக்கு முடியும்வரை பொதுமக்களை நினைவு இல்லத்துக்குள் அனுமதிக்க கூடாது என்றும் தமது உத்தரவில் தெரிவித்துள்ளது.