சென்னை: மறைந்தமுதல்வர்  ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன்  வேதா இல்லத்திற்கான இழப்பீட்டு தொகையை எவ்வாறு பிரித்துக் கொள்வது என்பது  குறித்து, ஜெயலலிதாவின் வாரிசுதாரரான தீபக், தீபா மற்றும் வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என மாநில அரசு அறிவித்தது. பின்னர், வேதா இல்ல நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றையும் தமிழ்நாடு அரசு பிறப்பித்தது. வேதா நிலையம் எனப்படும்   24 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட அந்த வீட்டின் தற்போதைய மதிப்பு 90 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.
அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  ஜெயலலிதா  சொத்துக்களின் சட்ட வாரிசுகளான தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகளில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாமல் அந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை தமிழ்நாடு அரசு விலைக்கு வாங்க ஏதுவாக 24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பு கொண்ட வேதா இல்லத்திற்கு இழப்பீட்டு தொகை, வருமான வரி பாக்கி என 68 கோடி ரூபாயை சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்தது. அதில், மறைந்த ஜெயலலிதா செலுத்தாமல் இருந்த வருமான வரி பாக்கி 36.9 கோடியும்  உள்ளது.
இந்த வருமான வரி பாக்கியை தங்களிடம் வழங்க உத்தரவிடக்கோரி வருமான வரித்துறை வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கு  சென்னை ஐந்தாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
மனுக்களை விசாரித்த சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், அரசின் இழப்பீட்டு தொகையை எவ்வாறு பிரித்துக் கொள்வது என்று ஜெயலலிதாவின் சட்டரீதியான வாரிசுகளான தீபா, தீபக் மற்றும் வருமான வரித்துறை தரப்பில் நவம்பர் ஐந்தாம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.