வாழும் காலத்திலேயே பாசிட்டிவ்வாகவும் நெகட்டிவ்வாகவும் பல சாதனைகளை செய்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. மறைவுக்கு பிறகு நல்ல விஷயங்கள் அவருக்கு பெருமை சேர்ப்பதைவிட, மோசமான விஷயங்களுக்காகவே அவர் பெயர், மேலும் மேலும் சேதாரமாகிறது

இப்போது. ஒரு முதலமைச்சராக இருந்தவர் என்ற அடிப்படையில் சட்டசபையில் ஒரு படம் திறப்பதற்குக்கூட, எவ்வளவு எதிர்ப்புக்குரல்கள்.

‘’அரசியலில் எதிரியாக இருக்க வேண்டாம் என்றுதான் நினைத்தோமே தவிர, நீங்களே இருக்கக்கூடாது என்று என்றைக்குமே நாங்கள் நினைத்ததில்லை’’ என உண்மையிலேயே திடீர் மரணத்துக்காக மனம் நொந்துபோய் எதிர்கட்சியினர் சொன்ன வாசகங்கள் இதுபோல் ஏராளம்.

ஆனால் அப்படிப்பட்டவர்கள்தான் இப்போது சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தை திறப்பது சட்டசபையின் மாண்பையே குலைக்கும் செயல் என்று போராடுகிறார்கள்.

‘’தடைசெய்யப்பட்ட “குட்கா” போதைபொருளின் தாராள விற்பனையை பகிரங்கப்படுத்த திமுக உறுப்பினர்கள்  சட்டமன்றத்திற்குள் கொண்டுசென்றபோது “அவை மீறல்” என்றனர்.. இப்போது, அரசியல் சட்டத்துக்கும்-உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் விரோதமாக ஊழல் குற்றவாளியின் படத்தை சட்டமன்றத்திற்கு உள்ளேயே திறந்து வைக்க முயற்சிக்கிறார்கள்’’ இப்படி விமர்ச்சித்தார் சட்டமன்ற எதிர்க்கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலின்.

பல்வேறு எதிர்ப்பையும் மீறி சட்டசபையில் ஏழு அடி உயரமுடைய ஜெயலலிதாவின் உருவப்படம், திட்டமிட்டபடி பிப்ரவரி 12ந்தேதி திறந்து வைக்கப்பட்டு விட்டது.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இருக்கைக்கு நேராக ஜெயலலிதாவின் படம் பிரமாண்டாக நிற்கிறது.

அதிமுக உறுப்பினர்களைத்தவிர வேறு எந்த கட்சி உறுப்பினர்களும் படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து விட்டார்கள். பிரதமர் நரேந்திர மோடியே வருவார் என சொல்லிக் கொண்டிருந்தனர் தமிழக ஆட்சியாளர்கள். ஆனால் பிரதமரென்ன, மத்திய அரசின் பிரதிநிதியாகக்கூட ஒருத்தரும் வரவில்லை.

எடுத்ததற்கெல்லாம் தமிழகத்தின் பட்டிதொட்டிக்கெல்லாம் ஆய்வுக்கு போகிற ஆளுநர் புரோஹித்கூட எட்டிப்பார்க்கவில்லை.. வீண் சர்ச்சையில் சிக்கிக்கொள்வோமோ என்ற முன்னெச்சரிக்கையோடவே இந்த தரப்புகள் செயல்பட்டிருக்கின்றன.

இன்னொரு ஆச்சர்யமான விஷயம், சுயேட்சை எம்எல்ஏவான டி.டிவி.தினகரன்கூட நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டார்.

இங்கே ஒரு விஷயத்தை கூர்ந்து கவனிக்கவேண்டும். ஜெயலலிதா படத்தை வைக்க எதிர்ப்பவர்கள் முழுவேகத்தை எதிர்ப்பில் காட்டு கிறார்கள். ஆனால் வைக்கவேண்டும் என்பவர்களும் அதற்கு ஆதரவு தெரிவித்தாகவேண்டிய நிலையில் இருப்பவர்களும் சொல்லும் விளக்கம்தான் விதவிதமாய் இருக்கிறது..

ஒரு பெண்ணாக, முதலமைச்சராக, கட்சியின் தலைவராக பல சாதனைகள் படைத்தவர் ஜெயலலிதா என்பதால் அவர் படத்தை சட்டசபையில் திறப்பதில் தவறில்லை என்கின்றனர் ஆட்சியில் உள்ளவர்கள்,

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதலமைச்சராக இருந்தவர் என்ற முறையில் படம் வைப்பது தப்பில்லை என்றுதான் சொல்கிறாரே தவிர,  சட்டத்தின் பார்வையின் ஜெயலலிதாவின் நிலை என்னவென்று நேரடியாக சொல்ல மறுக்கிறார்..

இவர்கள் மட்டுமல்ல சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றமே, ஜெயலலிதா விவகாரத்தில் அடிச்சி விளையாடி கடைசியில் குழப்பித்தானே விட்டிருக்கிறது..

புரட்சித்தலைவி, அம்மா, தங்கத்தாரகை, சாதனைத்தலைவி, உயிருக்கு நிகரானவர்.. இப்படி அதிமுகவினரும் ஜெயலலிதாவை நேசிப்பவர்களும் கொண்டாடட்டும்.. அது அவர்கள் உரிமை அவர்களை யாரும் தடுக்கவில்லை.. தடுக்கவும் முடியாது…

ஆனால் சட்டப்படி ஊழல் குற்றவாளி என்று தீர்மானமாகிவிட்ட ஒருவரை ஜனநாயகத்தின் மாட்சிமையை தாங்கிப்பிடிக்கும் இடத்தில் பெருமைமிகு அடையாளமாக நிலைநிறுத்தப்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?

சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவருக்கு எதிரான மேல்முறையீடு அற்றுப்போகிறது என்று சொல்கிறது. டெக்னிக்கலாக தீர்ப்பில் பொட்டில் அறைந்தால்போல ஜெயலலிதாவை குற்றவாளி என்றும் சொல்லவில்லை..நிரபராதி என்றும் சொல்லவில்லை.

ஆனால் தீர்ப்பு எழுதிய நீதிமன்றம் பல இடங்களில் ஜெயலலிதாவைத்தான் அதிகமாக சாடியிருக்கிறது.. சாம்பிளுக்கு இரண்டே இரண்டு இடங்களை பார்ப்போம்..

‘’குற்றஞ்சாட்டப்பட்ட  நான்குபேரும் போயஸ் கார்டன் இல்லத்தில் சமூக உறவின் அடிப்படையில் சேர்ந்து வாழவில்லை. நெம்பர் ஒன் அக்கூஸ்ட்டு ஜெயலலிதா, மற்ற மூவரையும் மனிதாபிமான அடிப்படையில் தனது வீட்டில் தங்க அனுமதிக்கவில்லை.

மாறாக, முறைகேடாகச் சேர்த்த பணத்தில் குவித்த சொத்துக்களை, மற்ற மூன்று பேரின் பெயர்களில் பிரித்துக்கொண்டு நிர்வகிப்பது என்ற சதித் திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கத்தில் மட்டுமே, மூவரையும் தனது இல்லத்தில் இலவசமாகத் தங்கிக்கொள்ள ஜெயலலிதா அனுமதித்திருக்கிறார்’’

‘’சொத்து சம்பாதிப்பதில் இவர்களுக்கு எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லை. இவர்களிடம் பேராசை மட்டுமே இருந்துள்ளது. இவர்களது தந்திரங்களைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. இவர்களை அனுமதித்தால் நாட்டில் அமைதி குலைந்துவிடும். இவர்களை அனுமதித்தால் நியாய தர்மம் பார்ப்பவர்கள் நாட்டில் சிறுபான்மை ஆகிவிடுவார்கள்’’

இப்படி தீர்ப்பில் பல ஆவணங்களை ஆதாரமாக வைத்து ஜெயலலிதா விஷயத்தில் உச்சநீதிமன்ற பெஞ்ச் விளாசியிருக்கிறது.. ஆனாலும் ஜெயலலிதா குற்றவாளி இல்லை என்கின்றனர்.

கீழ் நீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றை தாண்டி உச்சநீதிமன்றம் போய் விசாரணையெல்லாம் முடிந்து தீர்ப்பு சொல்லப்படும் என்ற நிலையில்தான் ஜெயலலிதா காலமாகிறார்.

கர்நாடகா உயர்நீதிமன்றம் தந்த நிரபராதி என்ற தகுதியோடு, அவர் தன்னை மீண்டும் நிரபராதியே என சட்டத்தின்முன் நிலைநிலை நிறுத்த வாதம் செய்வதற்கு வாய்ப்புகள் இருந்தபோது, உயிரோடுதான் இருந்தார். அவர் தரப்பில் ஜாம்பாவன்கள் வந்து வாதாடி னார்கள். வாதங்கள் எல்லாம் முடிந்தபிறகு இனி மேற்கொண்டு வேலையே இல்லை என்கிறபோதுதான் அவர் உயிரோடில்லை. அப்படியிருக்க, அவர் மீதான மேல் முறையீடு அற்றுப்போகிறது என்பதுதான் எப்படியென புரியவேயில்லை.

அதாவது ஒருவர் தேர்தலில் வாக்களிக்கிறார். வாக்கு எண்ணிக்கைக்கு முன் தினம் இறந்துபோகிறார். அவர் போட்டுவிட்டு சென்ற வாக்கு, செல்லாத வாக்காக ஆகிவிடுமா? ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு எதிரான மேல்முறையீடு அற்றுப்போகிறது என்று உச்சநீதிமன்றம் சொன்னது, அப்படித்தான் இருக்கிறது

எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த சொத்துக்குவிப்பு வழக்கே கூட்டுச்சதி என்ற குற்றத்தின் அடிப்படையில் சுழன்ற ஒன்று.. மாட்டினால் எல்லாரும் குற்றவாளிகள், இல்லையென்றால் அனைவருமே நிரபராதிகள் என்பதுதான் பெரும்பாலும் இதுபோன்ற வழக்குகளில் முடிவு இருக்கும்..

கூட்டுச்சதி வழக்கில் ஏ டூ, ஏ த்ரி, ஏ ஃபோர் ஆகியோர் குற்றவாளி எனும்போது, ஏ ஒன் மட்டும் எப்படி நிரபராதியாக இருக்க முடியும்?

மறுசீராய்வு மனு வாய்ப்பு நேரத்தில் ஜெயலலிதா இல்லாததால் அவர் நிரபராதியே என்று காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி திருவாய் மலர்ந்தருள்கிறார். உச்சநீதிமன்றத்தின் மறுசீராய்வு, குற்றவாளி என்று சொல்லாதவரை ஒருத்தர் நிரபராதிதான் என்றால், அப்புறம் எதற்கு வீணாய், இந்த கீழ் நீதிமன்றம், உயர்நீதிமன்றம் போன்றவை? விட்டால் கடவுளே நேரில் வந்து குற்றவாளி என்று சொன்னால்தான் இவர்கள் நம்புவார்கள்போல் இருக்கிறது. அப்படி வந்தால் அந்த கடவுளையே சந்தேகப்பட்டு அடுத்த எல்லைக்கு போய்க்கொண்டே இருப்பார்கள் இவர்கள்.

உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பின்படி ஜெயலலிதா குற்ற வாளி இல்லையா என்பது அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம்..தங்கள் சுயவிருப்பதிற்காக சட்டத்தின் மாட்சிமை முன்பு இடத்திற்கு தக்கப்படி பேசுபவர்கள், நாசமான சூழலுக்கு அடிகோலுகிறவர்கள்.

யார்தான் தப்பு செய்யவில்லை..? ஜெயலலிதா மாட்டிக்கொண்டார்,, மற்றவர்களெல்லாம் யோக்கியமா? இப்படிப்பட்ட கேள்விகளை கேட்கும் தரப்புகளுக்கும் பஞ்சமில்லை.

எல்லோரும் கடைந்தெடுத்த அயோக்கியர்களாகவே இருக்கட்டும்.. ஆனால் அந்த அயோக்கியர்கள் மனதில், ஒருநாள் நாமும் தண்டிக்கப்படுவோம் என்ற பயத்தை காட்டுவதற்காக ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பை ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது?

சமரச புத்தியோடு ஊழல்வாதிகளை தாங்கிப்பிடிப்பது இங்கே ஒன்றும் புதிதில்லை.. சாதாரண குடும்பத்திலேயே இப்படிப்பட்ட சமரச புத்திதான் பேரழிவுகளை கொண்டுவரும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அதைப்பற்றி யோசிக்கத்தான் மாட்டார்கள்.

மகனோ, கணவனோ, முதன்முறையாய்  ஒரு நாள் பீரை லைட்டா  குடித்துவிட்டு வருவான், பெண் உயிரேபோன மாதிரி பதறிப்போவாள்.. கடுமையாக கண்டிப்பாள், பையன் முரண்டுபிடித்தவுடன் கடுமையை அதிகமாக்கமாட்டாள். மாறாக சமரச போக்கை காட்ட ஆரம்பிப்பாள்.

கொஞ்ச நாளில் பீர் போய், பிராந்தி, விஸ்கி என ஸ்ட்ராங் சரக்குக்கு மாறுவான். அப்போதும் வேறுவழியில்லாமல் பெண்ணிடம் சமரசமே புத்தியே மேலோங்கும்

‘’அந்த குடிக்கிற கர்மத்தைத்தான் விடமாட்டேன்றீயே, நேரத்துக்காவது வீட்டுக்கு வந்து தொலையக்கூடாதா?’’

அடுத்த கட்டம்…. ‘’குடிச்சிட்டு லேட்டானாலும் வீட்டுக்கு வந்துதான் சாப்பிடனும்னு புத்திக்கு தோணாதா?’’

அடுத்தடுத்த கட்டம்.. ‘’குடிச்சிட்டு அங்கேயே சாப்பாட்டை சாப்பிட்டாலும் ஒடனே வீட்டுக்கு வந்து தொலையக்கூடாதா?’’

கடைசியில், ’’என்ன எழவு வேணாம்லும் பண்ணித்தொலை..ஆனா ராத்திரி வெளியே தங்காம வீட்டுக்கு சேந்து தொலை.. அதுபோதும்’’

பரிதாபத்துக்குரிய அந்த பெண்ணின் சமரச போக்கு இப்படியாக ஒருவனை படிப்படியாக கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகக்கிவிடும்..

கடைசியில் கேட்டாள் அந்த பெண்ணிடம் கேட்டால், திருப்பிக் கேட்பாள், ‘’எவன் வீட்டிலதான் எவன் குடிக்காம யோக்கியமா இருக்கான்?’’

குடியின் பாதிப்பை புறந்தள்ளிவிட்டு, குடியை பொதுவில் வைத்து ஒரு பெண் தன் குடும்ப தரப்பை உயர்த்திப்பிடிப்பது போலவே, ஊழலை பொதுவில் வைத்து தங்களுக்கு விருப்பமானவர்களை பலரும் உயர்த்தி பிடிக்கின்றனர்.. இந்த போக்கு மாறுகிறவரை சமுதாய பிணிக்கு தீர்வில்லை..

இங்கே இன்னொரு அதிமுக்கியமான விஷயத்தை மறந்துவிடக்கூடாது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேர் மட்டுமே நேரடியாக வருவாய்க்கு அதிகமாய் இவ்வளவு சொத்துகளை குவித்திருக்க முடியாது.

. இவர்களுக்கு இடையில் நின்று அதிகாரவர்க்கம் தங்கள் பங்குக்கு சுரண்டிகொள்ளாமல் இதெல்லாம் நடந்திருக்க வாய்ப்பேயில்லை.. ஆனால் அவர்களெல்லாம் எங்கே? அவர்களுக்கெல்லாம் தண்டனையே கிடையாதா?

காப்பாற்ற சில பேர் இருந்துவிட்டால்

கள்வர்கள் வாழ்விலும் ஞாயமுண்டு