சென்னை:

ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்ற நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து நில எடுப்பு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முதல் நிலை அறிவிப்பினர் விவரம் வருமாறு:

சமூக தாக்க மதிப்பீட்டு குழுவாகிய நாங்கள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை, அரசு நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக அரசு எடுத்துள்ள முடிவு பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவே என்று முடிவு செய்கின்றோம்.

நில எடுப்பு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள நிலத்தை மாவட்ட கலெக்டர் மற்றும் தொடர்புடைய அலுவர்களால் வேலை நாட்கள் மற்றும் வேலை நேரங்களில் தணிக்கை மேற்கொள்ளலாம்.

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, பொதுப் பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் அவர்தம் பணியாளர்கள் பணியை தொடர வேண்டி அனுமதி வேண்டி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நில எடுப்பு அலுவலர் மற்றும் கலெக்டர் முன் அனுமதியின்றி நில எடுப்பு அலுவலரால் நில எடுப்பு செய்யும் பொருட்டு, தமிழ்நாடு அரசிதழில் விளம்புகை செய்யப்பட்ட நிலத்தினை, வில்லங்கத்துக்கு உட்படுத்தவோ,விற்பதற்கோ, வாங்குவதற்கோ அல்லது பிற பரிவர்த்தனைகள் மேற்கொள்ளவோ அரசிதழில் வெளியிடப்பட்ட நாள் முதல் எந்த ஒரு நபரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேற்கண்ட நில எடுப்பு தொடர்பாக ஆட்சேபணை இருப்பின், நிலத்தில் சார்புடைய நபர், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் நில எடுப்பு அலுவலர் மற்றும் தென் சென்னை கோட்ட வருவாய் அலுவலரிடம் தெரிவிக்கலாம்.