சென்னை,

றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை வரும் 9ந்தேதிக்கு தள்ளி வைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தர விட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து அதிமுக தொண்டர் ஜோசப் என்பவர்  தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கு கடந்த வாரம்  சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

அந்த வழக்கை நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.  ஜெயலலிதாவின் மரணத்தில் தனிப்பட்ட முறையில் தனக்கும் சந்தேகம் உள்ளது என்று நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பரபரப்பு கருத்து தெரிவித்திருந்தார்.

இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க கோரி மேலும் இரண்டு வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் ஜெ. மர்ம மரணம் குறித்து மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘ஜெயலலிதா நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்து வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஆஸ்பத்திரியில் இரவோடு இரவாக சேர்த்தனர்.

அதன்பின்னர் அவருக்கு ரகசியமான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது சாவில் மிகப்பெரிய மர்மம் உள்ளது.

எனவே, கடந்த 2 ஆண்டுகளாக அவ ருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள், மருத்துக்களின் விவரங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

அதேபோல, அப்பல்லோ ஆஸ்பத்திரி யில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை விவரங்கள், மருந்துக்களின் விவரங்கள் மற்றும் அவரது சிகிச்சை அளித்த உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யவேண்டும்.

அதுதொடர்பான அறிக்கையை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாககத்திடம் பெற வேண்டும். அதன்பின்னர் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

அதேபோல டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவில்,  ‘ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து பல சந்தேகங்கள் தமிழக மக்கள் மத்தியில் உள்ளன. எனவே, அவரது மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ, சிறப்பு புலனாய்வுபிரிவு அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் கொண்ட ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை உருவாக்கி, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த இரு வழக்குகளும் தலைமை நீதிபதி சஞ்சய் கி‌ஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ஏற்கனவே ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கு வருகிற 9ந் தேதி அன்று விசாரணைக்கு வர உள்ளது  என்றார்.

மனுதாரர்கள் தரப்பிலும், ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குடன் இந்த வழக்கை சேர்த்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்கள்.

இதையடுத்து இந்த இரு வழக்குகளின் விசாரணையை வருகிற 9-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.