ரத்தம் சொட்ட சொட்ட போலீசார் தாக்கியதாலேயே ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்தனர்! சிபிஐ அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

மதுரை: ரத்தம் சொட்ட சொட்ட போலீசார்  மிருகத்தனமாக தொடர்ந்து தாக்கியதாலேயே ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்தனர், வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த  குற்றப்பத்திகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துகுடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்ததாக கைது செய்யப்பட்ட தந்தை மகன், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு,  காவலர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இந்த வழக்கு பூதாகரமாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, கொலையில் சம்பந்தப்பட்ட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாறியது.

இந்த வழக்கில் கைதான காவலர்கள் தாமஸ், முத்துராஜ் மற்றும் ஸ்ரீதர் உள்ளிட்டோர் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் சிறையில் இருக்கும் காவலர்களுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ அனுமதி அளிக்கவில்லை.

இந்த நிலையில், வழக்கை விசாரித்து வருரும் டெல்லியில் உள்ள சிபிஐ காவல் கண்காணிப்பாளர் தன்மயா பெஹரா, கூடுதல் கண்காணிப்பாளர் விஜய் குமார் ஷுக்லா,  மதுரை நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.  அதில், பல அதிர்ச்சி யூட்டும் தவல்கள் வெளியாகி உள்ளது.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ரத்தம் சொட்ட, சொட்ட, மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதால் மோசமடைந்த உடல்நிலை காரணமாகவே ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸும் உயிரிழந்துள்ளதாக மருத்துவ ஆய்வறிக்கைகள், தடயவியல் பரிசோதனைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தை மகன் இருவரையும் போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் அதன் பேரில் அன்று இரவு முழுவதும் அவரை தந்தை மகன் இருவரையுமே கடுமையாக தாக்கி உள்ளனர். இருவரது உடலில் இருந்தும் ரத்தம் சொட்ட, சொட்ட, போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இருவரையும் காவல் நிலையத்தில் ஒரு மேஜையில் படுக்க வைத்து இருவரது ஆடைகளையும் பகுதியளவு கலைத்து, ஆசனவாய் பகுதியில் லத்தி, கம்பு போன்றவற்றால் மிருகத்தனமாக கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது அவர்களை 3 போலீசார் பிடித்துக்கொள்ள ஆய்வாளர் ஸ்ரீதர், தலைமைக் காவலர் முத்துராஜா ஆகியோர் கடுமையாக தாக்கி உள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்காக அவர்களின் உடைகள் கிழிந்த நிலையிலும் அவர்களை கடுமையாக தாக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

இதில் இருவருக்கும் ரத்தம் கடுமையாக வந்துள்ளது. ரத்த காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவற்றை மறைத்து போலீசார் மருத்துவச் சான்றிதழ் பெற்று அவற்றுக்கு முறையாக சிகிச்சை அளிக்காமலேயே கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர் . இதன் காரணமாக   தந்தை மகன் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

மிருகத்தனமாக போலீசார் தாக்கியதாலேயே ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்தனர், காவல்நிலையம், லத்தி மற்றும் அவர்களின் உடைகளில் படிந்திருந்த ரத்த மாதிரிகளை சேகரித்து டிஎன்ஏ பரிசோதனை ஆகியவற்றின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள் அனைத்தும் காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவலர்கள் பியூலா மற்றும் ரேவதியின் வாக்குமூலத்தை வைத்தே உறுதிப்படுத்தப்பட்டதாகவும் சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ குற்றப்பத்திரிகையின் குறிப்பிட்டுள்ள தவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனத்தை உலகுக்கு அம்பலப்படுத்தி உள்ளது.