டில்லி

த்திய அமைச்சர் பியுஷ் கோயலின் புவி ஈர்ப்பு குறித்த கருத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் மிகவும் கேலி செய்துள்ளார்.

இந்தியா வரும் 2024க்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டி விடும் என  பாஜக அமைச்சர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.   அதே நேரத்தில் பொருளாதார வல்லுநர்கள் தற்போது இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்து வருகின்றனர்.     மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியில் உள்ளதாகக் கூறி வருகின்றனர்.

நேற்று வர்த்தக வாரியத்தின் கூட்டம் ஒன்று டில்லியில் நடந்தது.   அதில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழிலகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், “உங்களுக்கு 5 டிரில்லியன் டாலர்  பொருளாதாரம் தேவை என்றால் தொலைக்காட்சிகளில் காட்டப்படும் கணக்குகளை நம்ப வேண்டாம்.  தற்போது நாடு 6-7% பொருளாதார வளர்ச்சியில் உள்ளது.   அண்ட வளர்ச்சி 12% ஆக விரைவில் மாறும்.

இந்த கணக்குகளைக் கவனத்தில் கொள்ள வேண்டாம்.  இந்த கணக்கு  எதுவும் ஐன்ஸ்டீனுக்குப் புவி ஈர்ப்பு விசையைக் கண்டு பிடிக்க உதவவில்லை.   அவர் ஏற்கனவே உள்ள தகவலை வைத்துத் தான் உருவாக்கிய சூத்திரம் மூலம் அதைக் கண்டறிந்தார்.  எனக்குத் தெரிந்து இந்த உலகில் எந்த ஒரு புதுக் கண்டுபிடிப்பும் நிகழவில்லை” எனக் கூறி உள்ளார்.

புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தவர் ஐசக் நியூட்டன் என்னும் நிலையில்  அமைச்சர் ஐன்ஸ்டீன் எனக் கூறியது நெட்டிசனகளுக்கு மிகவும் நகைச்சுவையாக இருந்துள்ளது.   இதை வைத்து அவர்கள் டிவிட்டரில் வித விதமாக அமைச்சர் பியூஷ் கோயலை கேலி செய்து வருகின்றனர்..

இதில் முக்கியமாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ்,  “ஆமாம் அமைச்சர் அவர்களே,  ஐன்ஸ்டீனுக்குப் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடிக்கக் கணக்கு தேவைப்படாது  ஏனெனில் அதை நியூட்டன் ஏற்கனவே கண்டு  பிடித்து விட்டார்.   அடுத்து மனித வள அமைச்சர் புவியீர்ப்பு விசையை நமது முன்னோர்கள் கண்டுபிடித்துள்ளார் என சொல்லுவார். (அல்லது ஏற்கனவே சொல்லி விட்டாரா?).  இத்தகைய அமைச்சர்களை வைத்துக் கொண்டு நாம் 5 டிரில்லியன் பொருளாதாரம் அடைய நமக்குக் கடவுள் மட்டுமே உதவ முடியும்” என டிவிட்டரில் பதிந்துள்ளார்.