பெங்களூரு:

முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமயிலான மதசார்பற்ற ஐக்கிய ஜனதா தள கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் 7 பேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

கடந்த 23ம் தேதி நடந்த ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஓட்டுப்போட்ட இவர்கள் தங்களது எம்எல்ஏ.க்கள் பதவியை நேற்று ராஜினாமா செய்தனர்.

சமீர் அகமதுகான், சாலுவராயசாமி, இக்பால் அன்சாரி, பாலகிருஷ்ணா, ரமேஷ் பண்டிசித்தேகவுடா, பீமா நாயக், அக்கண்டா சீனிவாஸ மூர்த்தி ஆகியோர் ராகுல்காந்தி தலைமையில் நடந்த தேர்தல் பிரச்சார பேரணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கட்சியில் இணைந்தனர்.

இவர்களுடன் மதசார்பற்ற ஜனதா தள முன்னள் மேலவை உறுப்பினர்கள் நானையா, சரோவர் சீனிவாஸ், ராமகிருஷ்ணா ஆகியோரும் காங்கிரஸில் இணைந்தனர். ராஜ்யசபா தேர்தலில் 2 இடங்களை மட்டுமே கைப்பற்ற கூடிய பலம் காங்கிரஸ் வசம் இருந்தது. ஆனால் இந்த 7 எம்எல்ஏ.க்கள் உதவியுடன் 3வது இடத்தை காங்கிரஸ் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 7 எம்எல்ஏ.க்கள் உள்பட 44 எம்எல்ஏ.க்களின் பலத்துடன் மதசார்பற்ற ஜனதா தளம் ராஜ்யசபா தேர்தலில் வேட்பாளரை நிறுத்தியது. இடையில் 7 எம்எல்ஏ.க்களின் ஆதரவு குறைந்தது. அதனால் தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது காங்கிரஸ் முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி தேர்தலை புறக்கணித்தது.