கர்நாடகாவில் ஜேடிஎஸ் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை,கைகோர்க்கும் பிரஷாந்த் கிஷோர்: குமாரசாமி தகவல்

பெங்களூரூ: கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளத்தின் தேர்தல் உத்தி வகுப்பாளராக கைகோர்க்க இருக்கிறார் பிரஷாந்த் கிஷோர்.

தமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதற்காக, திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரஷாந்த் கிஷோர் இணைந்து உள்ளார். அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டது.

இந்நிலையில், கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதாதளத்தின் தேர்தல் உத்தி வகுப்பாளராக விரைவில் இணைய இருக்கிறார் பிரஷாந்த் கிஷோர். அதற்காக முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ளன.

இந்த தகவலை மதசார்பற்ற ஜனதா தளம் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி அறிவித்து இருக்கிறார். அவர் கூறியதாவது:

நான் அவருடன் (பிரசாந்த் கிஷோர்) பேசினேன். எதிர்காலத்தில் கர்நாடகாவில் கட்சியை அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கும் நோக்கில் அவருடன் முதல் சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளன.

அந்த விவரங்கள் என்ன என்பது பற்றி பிறகு சொல்கிறேன் என்றார். தொடர்ந்து அவர் பேசியதாவது: தற்போதைய அரசாங்கத்தை பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை.

இந்த அரசாங்கத்தைப் பற்றி விவாதிக்க ஒன்றுமில்லை என்பதால் அதன் தேவையே இல்லை. வளர்ச்சி இல்லாதபோது, விவாதிக்க என்ன இருக்கிறது? என்றார்.