பெங்களூரு

பாஜக அணிக்கு மாற தமக்கு ரூ. 40 கோடி தர முன் வந்ததாக மதச்சார்பற்ற ஜனதா தள சட்டப்பேரவை உறுப்பினர் மகாதேவ் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இந்த கூட்டணி அரசை கலைக்க பாஜக கடும் முயற்சி செய்து வருவதாக இரு கட்சிகளுமே பலமுறை தெரிவித்துள்ளன. இதை பாஜக தொடர்ந்து மறுத்து வருகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 14 சட்டப்பேரவை உறுப்பினர்கள் திடீரென ராஜினாமா செய்துள்ளனர். இதனால் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் தொண்டர்கள் பெங்களூரு தலைமையகத்தில் நேற்று போராட்டம் நடத்தி சட்டப்பேரவை உறுப்பினர்களின் ராஜினாமாவை திரும்பப் பெற வலியுறுத்தி உள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா அனைத்து உறுப்பினர்களும் தமது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தொண்டர்கள் பயப்பட வேண்டாம் எனவும் கூறினார்.

இந்நிலையில் மஜத உறுப்பினர் மகாதேவ், “பாஜக அணிக்கு மாறுவதற்காக அக்கட்சியில் இருந்து எனக்கு ரூ.40 கோடி லஞ்சம் அளிக்க முன் வந்தனர். அத்துடன் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் ஜர்கிஹோலி தமக்கு ரூ.80 கோடி தேவை என பேரம் பேசினார். இது என் முன்னிலையில் நடந்தது. எனது அறையில் பாஜகவினர் ரூ.40 கோடியை வைத்து விட்டு செல்ல முயன்றனர். ஆனால் நான் இந்த பேரத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை.

அவர்களிடம் பணத்தை உடனடியாக திருப்பி எடுத்துச் செல்லுமாறும் இல்லையெனில் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் அளிப்பேன் எனவும் மிரட்டினேன். அதன் பிறகு அவர்கள் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினர். இதுவரை எனக்கு மூன்று முறை பாஜக வினர் பணம் அளிக்க வந்துள்ளனர். நான் எனது ஆன்மாவை விற்க விரும்பவில்லை. இல்லையெனில் நானும் பணம் வாங்கி இத்தகைய கீழ்த்தரமான அரசியல் குட்டையில் விழுந்திருப்பேன்” என தெரிவித்துள்ளார்.

ரூ. 80 கோடி பேரம் பேசியதாக கூறப்படும் ரமேஷ் ஜர்கிஹோலி தனது பதவியை ராஜினாமா செய்தவர்களில் ஒருவர் ஆவார். இவருடைய ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க மறுத்துள்ளார். சபாநாயகர், “உறுப்பினர் ஃபாக்ஸ் மூலம் ராஜினாமாவை அனுப்பி உள்ளார். அதை ஏற்க முடியாது. நான் சபாநாயகர். என்னை அவர் தனது வேலையாள் என நினைத்து ஃபாக்ஸ் மூலம் ராஜினாமா அனுப்புகிறாரா?” என தெரிவித்துள்ளார்.