மும்பை

மும்பையில் மஜத மற்றும் காங்கிரஸை சேர்ந்த 10 அதிருப்தி எம் எல் ஏக்கள் தங்கி உள்ள ஓட்டலில் ரிசர்வ் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் மஜத மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. அந்த ஆட்சியை கலைக்க பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதற்காக பல சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அணி மாற லஞ்சம் கொடுக்க முற்பட்டதாக புகார்கள் எழுந்தன. அதை பாஜக மறுத்த போதிலும் இந்த புகார்கள் இன்றும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் மஜத மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 10 அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மும்பையில் ஒரு ஓட்டலில்  தங்கி உள்ளனர். அவர்களை பிடித்து மீண்டும் அரசுக்கு ஆதரவு அளிக்க வைத்து அரசை காக்க மஜத தலைவரும் முதல்வருமான குமாரசாமி கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

மும்பை ஓட்டலில் தங்கி உள்ள அவர்களை சந்தித்து பேச கர்நாடக மாநில அமைச்சர் சிவகுமார் மற்றும் மஜத சட்டப்பேரவை உறுப்பினர் சிவலிங்க கவுடா ஆகியோர் மும்பை விரைந்துள்ளனர்.

இதற்கிடையில் அந்த 10 அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களும் மும்பை காவல்துறையிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் முதல்வர் குமாரசாமி மற்றும் அமைச்சர் சிவகுமார் ஆகியோர் தாங்கள் தங்கி உள்ள ஓட்டலை முற்றுகை இட முயல்வதாக குற்றம் சாட்டி உள்ளனர்.

அதனால் அவர்களை ஓட்டல் வளாகத்தினுள் அனுமதிக்கக் கூடாது எனவும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.   சட்டப்பேரவை உறுப்பினர்களின் புகாரை ஒட்டி மகாராஷ்டிர மாநில ரிசர்வ் காவல்துறையினர் ஓட்டலை சுற்றி குவிக்கப்பட்டு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். கர்நாடக அரசியலில் இது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.