பாட்னா:

‘‘ஐக்கிய ஜனதா தளம் நிதிஷ்குமாருக்கு மட்டும் சொந்தமானது கிடையாது. எனக்கும் அதில் பங்கு உள்ளது’’ என்று சரத்யாதவ் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் மக்களை சந்தித்து உரையாடும் 3 நிகழ்ச்சிக்காக ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் சரத்யாதவ் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அப்போது மாதேபுரா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் சரத்யாதவ் பேசுகையில், ‘‘ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் அமைக்கப்பட்டிருந்த மெகா கூட்டணியை உடைத்துவிட்டு, பாஜக.வுடன் உறவு ஏற்படுத்தி புதிதாக ஆட்சி அமைத்த நிதிஷ்குமாரின் நடவடிக்கையால் எனக்கு வலியும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘பீகாரில் 2 ஐக்கிய ஜனதா தளம் உள்ளது. ஒன்று சர்க்காரி, மற்றொன்று ம க்களின் ஜக்கிய ஜனத தளம். சுயநலம் காரணமாக அனைத்து எம்எல்ஏ.க்களும், தலைவர்களும் நிதிஷ் குமாருடன் உள்ளனர்.

ஆனால், மக்களுடன் உள்ள கட்சி தலைவர்கள், தொண்டர்கள் என்னுடன் இருக்கிறார்கள். நான் எமர்ஜென்சி காலத்தில் இந்திராகாந்தியை பார்த்தே அஞ்சியது கிடையாது. உண்மையை பேசுவதற்காகவும், எனது கொள்கைக்காகவும் யாரையும் கண்டு அஞ்சமாட்டேன். என்னுடன் இருக்கும் கட்சி நிர்வாகிகள் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிதிஷ்குமாருடன் உள்ள நிர்வாகிகள் என்னை ஆதரிக்கும் நிர்வாகிகளை மிரட்டும் செயலில் ஈடுபட் டுள்ளனர். நான் இன்னும் மெகா கூட்டணியில் தொடர்கிறேன். பீகாரில் உள்ள 11 கோடி மக்களால் கடந்த 2015ம் ஆண்டு தேர்தலில் இந்த கூட்டணிக்கு தான் ஆதரவு அளிக்கப்பட்டது. அது 5 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும்’’ என்றார்.

ஐக்கிய ஜனதா தள ராஜ்யசபா தலைவர் பதவியில் இருந்து சரத்யாதவ் நீக்கப்பட்டிருப்பது குறித்த கேள்வி க்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.