டெல்லி: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வானது வரும் ஜூலை 3ம் தேதி தொடங்கும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

 

நாடு முழுவதும் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்காக ஜேஇஇ எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜேஇஇ) முறையில் மத்திய கல்வி அமைச்சகம் பல்வேறு மாற்றங்களை செய்தது. அதன்படி, ஆண்டுக்கு 4 முறை பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தேர்வுகள் கணினி வழியில் நடைபெறும்.

தேர்வானது தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும். மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒன்று அல்லது 4 முறை தேர்வில் பங்கேற்கலாம். அதில் பெறும் அதிகபட்ச மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதேபோல், மெயின் தேர்வில் 90 கேள்விகளில் 75 கேள்விகளுக்கு விடையளிக்க முயற்சிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களும் கொண்டு வரப்பட்டன.

இந் நிலையில் ஜேஇஇ தேர்வு தேதியை, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அப்போது, 2021-ம்ஆண்டுக்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு வரும் ஜூலை 3ம் தேதி தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, ஜேஇஇ மெயின் தேர்வானது வரும் பிப்ரவரி 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற உள்ளாக மத்திய கல்வி அமைச்சகம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.