நியூயார்க்:
மேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோசின் மனைவி மெக்கன்சி ஸ்காட் 4 மாதங்களில் 4 பில்லியன் அமெரிக்க டாலரை 384 தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் தலைவரும் உலகப் பணக்காரர்களில் ஒருவருமான ஜெப் பெசோசின் மனைவி மெக்கன்சி ஸ்காட். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அப்போது அமேசான் நிறுவனத்தின் 4 சதவீத பங்குகளை தனது மனைவி மெக்கன்சிக்கு ஜெப் பெசோஸ் ஜீவனாம்சமாக வழங்கினார். இதன் அப்போதைய மதிப்பு சுமார் ரூ.2 லட்சத்து 94 ஆயிரம் கோடி ஆகும்.

தற்போது மெக்கன்சியின் சொத்து மதிப்பு 60.7 பில்லியன் அமெரிக்க டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4 லட்சத்து 46 ஆயிரம் கோடி) உயர்ந்துள்ளது. இதன் மூலம் அவர் உலகின் 18-வது பணக்காரராகவும், உலக அளவில் பெண்களில் 3-வது பணக்காரராகவும் விளங்குகிறார்.

 

தனது சொத்து மதிப்பு உயர்ந்து வரும் அதேநேரத்தில் அவர் அறக்கட்டளைகளுக்கு நன்கொடை அளிப்பதிலும் அவர் வள்ளலாகத் திகழ்கிறார். ஏற்கெனவே கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதிலிருந்து கடந்த ஜூலை மாதத்துக்குள் 1.7 பில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.12 ஆயிரத்து 500 கோடி) பல்வேறு அறைக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கியிருந்தார்.

இந்நிலையில் அடுத்த 4 மாதங்களில் மீண்டும் 4 பில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.29 ஆயிரத்து 437 கோடி) 384 தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

தொற்றுநோயுடன் போராடும் அமெரிக்கர்களுக்கு உதவ விரும்பியதாகவும், அதற்காக இந்த நன்கொடைகளை வழங்கியதாகவும் மெக்கன்சி தெரிவித்துள்ளார்.