இஸ்லாமாபாத்: காஷ்மீரின் புலவாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து, இந்திய விமானப்படை பதில் தாக்குதல் நடத்தி, நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகளை கொன்றதாய் கூறப்படும் பாகிஸ்தானின் பாலகோட்டிலுள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் முகாம் தற்போது பழையபடி செயல்பாட்டிற்கு வந்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாய் கூறப்படும் அந்த வளாகத்தில் தற்போது 40 ஜிகாதிகள் பயிற்சி பெற்றுவருவதாகவும், அந்த ஜிகாதிகளின் நோக்கம் காஷ்மீர் மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் தாக்குதல் நடத்துவதுதான் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

அதேசமயம், சர்வதேச நெருக்கடியை தவிர்க்கும் வகையில், அந்த அமைப்பினர் வேறு பெயர்களில் இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. காஷ்மீர் விஷயத்தில் மோடி அரசு எடுத்த நடவடிக்கைகளால் சீற்றமடைந்துள்ள பாகிஸ்தான், இந்த பயங்கரவாத பயிற்சிக்கு ஆதரவளித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்தியாவை குறிவைத்து பாகிஸ்தானில் இயங்கிவரும் பல தீவிரவாத குழுக்களுக்கு, ஆகஸ்ட் 5ம் தேதி முதல் பாகிஸ்தான் அரசின் ஆதரவு அதிகரித்துள்ளது என்று தொடர்புடைய வட்டாரங்களிலிருந்து வரும் தகவல்கள் உறுதிபடுத்துகின்றன.

புலவாமா தாக்குதலையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி இந்திய விமானப்படை பாலகோட்டிலுள்ள பயங்கரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தி 300 தீவிரவாதிகள் வரை கொன்றதாக பாரதீய ஜனதா தரப்பில் தொடர்ந்து பிரச்சாரம் செய்தனர்.

ஆனால், சர்வதேச ஊடகங்களின் ஆய்வு மற்றும் நேரடி தகவல்களின் அடிப்படையில் அப்படி ஒரு தாக்குதலே நடக்கவில்லை என்றும், பயங்கரவாதிகள் யாரும் இறக்கவில்லை என்றும், பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானம் வீழ்த்தப்படவில்லை என்றும் கூறப்பட்டது.