ஜெருசலேம் : அமெரிக்க முடிவுக்கு இந்தியா உட்பட 128 நாடுகள் எதிர்ப்பு

வாஷிங்டன்

ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக ட்ரம்ப் அறிவித்ததற்கு எதிராக ஐநா சபையில் 128 நாடுகள் வாக்களித்துள்ளன.

ஜெருசலேம் நகரம் தங்களுக்கே என இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் ஆகிய இருநாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்ற்ன.    அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்ப் ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலை நகராக அறிவித்தார்.   இதனால் உலக நாடுகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.    இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என அமெரிக்காவை ஐ நா சபை கேட்டுக்கொண்டது.   அதற்கு அமெரிக்கா மறுத்து விட்டது.

ஐநா பொதுச் சபையில்  அமெரிக்காவின் ஜெருசலேம் பற்றிய அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.   தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் நாடுகளுக்கு அதாவது அமெரிக்காவின் முடிவை எதிர்க்கும் நாடுகளுக்கு நிதி உதவி நிறுத்தப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

தற்போது ஐ நா சபையில் வாக்கெடுப்பு முடிவு பெற்றுள்ளது.   இதில் அமெரிக்காவின் ஜெருசலேம் பற்றிய முடிவுக்கு எதிராக 128 நாடுகள் வாக்களித்துள்ளன.   அவற்றில் இந்தியாவும் ஒன்று.    அமெரிக்காவுக்கு ஆதரவாக 9 நாடுகள் மட்டுமே வாக்களித்துள்ளன.   வாக்களிப்பில் 35 நாடுகள் பங்கேற்கவில்லை.   இந்த வாக்களிப்பு முடிவினால் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அறிவித்துள்ளது என்னவாகும் என உலக மக்களின் மனதில் கேள்வி எழுந்துள்ளது.