டில்லி

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நலனுக்காக விமானிகளின் ஆதரவை நிறுவன தலைவர் நரேஷ் கோயல் கேட்டுள்ளார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சமீப காலமாக கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இந்த நிறுவனத்துக்கு கடன் அளித்துள்ள பாரத ஸ்டேட் வங்கி வர வேண்டிய பாக்கி குறித்து பேச ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைவர் நரேஷ் கோயல் மற்றும் இந்த நிறுவனத்தின் 24% பங்குதாரரான எதிஹாட் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டோனி டக்ளாஸ் ஆகியோருக்கு அழைபு விடுத்தது.

அப்போது வங்கி அளித்த சீரமைப்பு திட்டத்தின்படி வங்கிக்கு நிறுவனத்தின் புதிய பங்குகளை ஒதுக்கீடு செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் கடன் அளித்த வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் விமான நிறுவனம் வர உள்ளது. தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு ரூ. 8,000 கோடி கடன் உள்ளது. இதை திருப்பிச் செலுத்த அந்த விமான நிர்வாகம் மிகவும் சிரமப்பட்டு வருகிறது.

அத்துடன் தற்போது நிறுவனத்தின் மூன்றில் ஒரு பங்கு விமானங்கள் பறக்காமல் உள்ளதால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தால் கடனை திருப்ப செலுத்தவும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த வார தொடக்கத்தில் விமானிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு பட்டி அணிந்தபடி பணியில் ஈடுபட்டனர் ஆயினும் இந்திய பாகிஸ்தான் பிரச்னையை ஒட்டி இந்த போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் நிர்வாக தலைவர் நரேஷ் கோயல், “விமானிகளுக்கு எனது உளமார்ந்த வேண்டுகோள். தர்போது உங்கள் அனைவர் மனதிலும் உள்ள உணர்வுகளை நான் புரிந்துக் கொள்கிறேன். இது போன்ற சூழ்நிலை இனியும் நீடிக்காத படி நாம் நமது துயரத்தில் இருந்து மீண்டு வருவோம். நமக்குள்ள பொருளாதார பிரச்னைகள் விரைவில் களையப்பட்டு நம் துயர் சூழ்ந்த வானம் தெளிவு பெறும்.

இந்த நிறுவனத்துக்குகாகவும் அதன் ஊழியர்களுக்காகவும் எனது வாழ்நாள் முழுவதும் நான் செலவிட்டுள்ளேன். அத்துடன் ஜெட் ஏர்வேஸ் தொடர்ந்து இயங்க என்னால் முடிந்த எதையும் செய்ய நான் இனியும் தயாராக உள்ளோம். ஜெட் ஏர்வேஸ் மீண்டு வருவது மட்டுமின்றி முதல் இடத்துக்கும் வரும் என்னும் வாக்குறுதியை உங்களுக்கு அளிக்கிறேன்.” என ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.