பால்கார், மகாராஷ்டிரா

ஜெட் ஏர்வேஸ் மூத்த தொழில்நுட்ப ஊழியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்போது கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. நிதிப் பற்றாக்குறையால் இந்நிறுவனம் கடன் தவணை, ஊதியர்களின் ஊழியம் போன்ற பல அத்தியாவசிய செலவுகளையும் நிறுத்தி வைத்துள்ளது. தினசரி நிர்வாக செலவுகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டதால் இந்நிறுவனம் இந்த மாதம் 17 ஆம் தேதி முதல் தனது சேவைகள் அனைத்தையும் முழுமையாக இடைக்கால ரத்து செய்துள்ளது.

இதனால் ஊழியர்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்நிறுவன ஊழியர்களில் ஒருவரான சைலேஷ் சிங் என்னும் 45 வயதானவர் மூத்த தொழில்நுட்ப ஊழியராக பணி புரிந்து வருகிறார். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கார் மாவட்டத்தில் உள்ள நலசோபாரா என்னும் நகரில் வசித்து வருகிறார். இவருக்கு புற்றுநோய் உள்ளது. அதற்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது சில மாதங்களாக ஊதியம் சரிவர கிடைக்காததல் சைலேஷ் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். புற்று நோய் சிகிச்சையை அவரால் பணம் இல்லாததால் தொடர முடியாமல் உள்ளார். ஜெட் ஏர்வேஸ் தனது சேவைகளை முழுமையாக நிறுத்தி விட்டதால் அவருடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.

மனம் உடைந்த சைலேஷ் சிங் தனது ஊரில் உள்ள ஒரு ஐந்து மாடி கட்டிடத்தின் உச்சிக்கு சென்று அங்கிருந்து குதித்து மரணம் அடைந்துள்ளார். இவருடைய மரணம் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களிடையே கடும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவரது குடும்பத்தில் மற்றொரு ஊதியம் பெறும் நபரான இவர் மகனும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணி புரிவதால் குடும்பமே வருமானம் இல்லாமல் தவிக்கிறது.