இன்ஜின் திடீர் கோளாறு: ஜெட் ஏர்வேஸ் விமானம் அவசர தரையிறக்கம்….103 பேர் தப்பினர்

இந்தூர்:

103 பேருடன் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமான இன்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஐதராபாத்தில் இருந்து மத்திய பிரசேதம் மாநிலம் இந்தூருக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் 96 பயணிகள், 7 சிப்பந்திகளுடன் இன்று புறப்பட்டது. இந்த விமானம் இந்தூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப காரணத்தால் இந்த அவசர தரையிறக்கம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த 96 பயணிகளும், 7 சிப்பந்திகளும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். ஜெட் ஏர்வேஸ் நிறுவன தொழில்நுட்ப வல்லுனர்கள் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

737 போயிங் ரக விமானமான இதில் 2 இன்ஜின்கள் உள்ளன. 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது இதில் ஒரு இன்ஜின் பழுதானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் 2 இன்ஜின்கள் கொண்ட விமானம், 1 இன்ஜின் மூலமே பாதுகாப்பான தரையிறக்கத்தை மேற்கொள்ளும்.

பாதிக்கப்பட்ட இன்ஜின் வழக்கமாக செயல்பாட்டில் இல்லாத இன்ஜினாகும். அதனால் அருகில் உள்ள விமானநிலையத்தில் தரையிறக்க ஆலோசனை வழங்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விமானம் சேருமிடமான இந்தூர் விமான நிலையம் அருகே பறந்து கொண்டிருந்த போது இந்த கோளாறு ஏற்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களில் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஏற்பட்ட 2வது கோளாறாகும். கடந்த 20ம் தேதி மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் சென்ற ஒரு விமானம் மீண்டும் மும்பைக்கே திரும்பி வந்தது. கேபினில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக 30 பயணிகளுக்கு ரத்த கசிவு ஏற்பட்டது. அப்போது விமானத்தில் 166 பயணிகள் இருந்தனர். இது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் தற்போது 2வது கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து அனைத்து விமானங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு விமான போக்குவரத்து இயக்குனரகத்துக்கு மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார். விமான நிலையம், விமானங்கள், பறக்கும் பயிற்சி பள்ளிகள், பராமரிப்பு, ரிப்பேர், ஓவர்ஆயிலிங் போன்றவற்றை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.