புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கிய ‘‍ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனம், தற்போது திவால் நிலைக்கு வந்துள்ளது.

கடந்த 1993ம் ஆண்டில், நரேஷ் கோயல் என்பவரால் தொடங்கப்பட்டது ஜெட் ஏர்வேஸ். விமானப் போக்குவரத்து துறையில் கொடிகட்டிப் பறந்த இந்த நிறுவனம், ஸ்பைஸ் ஜெட் மற்றும் இண்டிகோ ஆகிய நிறுவனங்கள் சந்தையில் நுழைந்த பின்னர், கடும் போட்டியால் தள்ளாடத் துவங்கியது.

முழுஅளவு சேவையைத் தருவதில் புகழ்பெற்ற இந்நிறுவனத்தால், இதர நிறுவனங்களோடு கட்டணக் குறைப்பு போட்டியில் ஈடுபட முடியவில்லை. எனவே, தொடர்ந்து வங்கிகளில் கடன்வாங்க தொடங்கியது இந்நிறுவனம். ஆனால், நிலுவைத் தொகையை தொடர்ந்து செலுத்த முடியவில்லை.

தற்போதைய நிலையில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வைத்திருக்கும் இந்நிறுவனம், அதிலிருந்து வெளிவர முடியாத நிலையில் இருக்கிறது. இந்த நெருக்கடியால், பல விமானப் பயணங்கள் ரத்து செய்யப்படுதல் மற்றும் விமானக் கட்டண உயர்வு போன்ற பல சிக்கல்கள் நிகழ்ந்தன.

எனவே, அந்நிறுவன விமானங்கள் தற்போது கடன் கொடுத்தவர்களின் கைகளுக்கே செல்கின்றன. இந்நிறுவன தலைவர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா ஆகியோர் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து, கடன் தீர்ப்பு நடவடிக்கைகளுக்கு வழிவிட்டுள்ளனர்.

– மதுரை மாயாண்டி