வந்தே பாரத் மிஷன் திட்டத்துக்கு இரு போயிங் விமானம் வழங்கும் ஜெட் ஏர்வேஸ்

டில்லி

நிதி நெருக்கடி காரணமாகச் சேவைகளை ஒரு வருடத்துக்கும் மேலாக நிறுத்தி வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்க இரு போயிங் விமானங்களை அளிக்க உள்ளது

கடன் சுமை அளவுக்கு மீறி அதிகரித்ததால் இந்திய விமானச் சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது.    நிறுவனத்தின் தினசரி செலவுகளுக்கும் நிதி இல்லாத நிலை ஏற்பட்டதால் இந்நிறுவனம் சுமார் ஒரு வருடத்துக்கு  மேலாகத் தனது சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது.  இந்நிறுவனம் திவாலாகி விட்டதாக  அறிவித்துள்ளது.

இந்திய நிறுவன திவால் சட்டத்தின்படி திவால் அலுவலர் ஆஷிஷ் சாச்சரியா அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.  இந்த நடவடிக்கைகள் முடிப்பதற்கான காலக்கெடு ஊரடங்கு காரணமாக ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.   தற்போது இந்த நிறுவனம் குறித்த அனைத்து நடவடிக்கைகளையும் ஆஷிஷ் சச்சாரியா கவனித்து வருகிறார்.

சாச்சரியா கடந்த 20 ஆம் தேதி அன்று நிறுவன விவகாரத்துறை செயலர் இஞ்செட்டி ஸ்ரீனிவாஸுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “தற்போது வெளிநாட்டில் சிக்கி உள்ள இந்தியர்களை அழைத்து வர நமது அரசு வந்தே பாரத் மிஷன் என்னும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.  அதற்கு நீங்கள் விரும்புவது போல் அதிக அகலமுள்ள போயிங் விமானங்களை அளித்து உதவ ஜெட் ஏர்வேஸ் தயாராக உள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் 12 விமானங்கள் சொந்தமாக மற்றும் நிதி ஏற்பாட்டின் கீழ் உள்ளன.  இவற்றில் ஒரு ஏர் பஸ் விமானம் ஏர் செர்பியா நிறுவனத்துக்கு வாடகை ஒப்பந்தத்தில் அளிக்கப்பட்டுள்ளது.  மற்றொரு போயிங் விமானம் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.  மற்ற 10 விமானங்களும் இந்திய விமான நிலையங்களில் உள்ளன.

ஆரம்ப மதிப்பீட்டின் அடிப்படையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இரு போயிங்777 – 300 இஆர் விமானங்களை அளிக்க உத்தேசித்துள்ளது  விரைவில் அது நான்காக அதிகரிக்கப்படும்.   வந்தே பாரத் திட்டத்தில் பங்கு கொள்வதற்கு நிறுவனம் தயாராக உள்ளது” என குறிப்பிடபட்டுளது.

இந்த கடிதத்தின் நகல் பயணிகள் விமான செயலர் பிரதீப் சிங் கரோலா, விமானத் துறை கண்காணிப்பாளர் அருண்குமார், மற்றும் பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ரஜினிஷ் குமார் ஆகியோருக்கு அனுப்பி உள்ளார்.   இந்த கடிதம் குறித்த தற்போதைய நிலை இன்னும் சரியாகத் தெரியவில்லை.

You may have missed