தங்கள் பணியை காக்க மோடிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேண்டுகோள்

டில்லி

ஜெட் ஏர்வேஸ் விமானிகள் நிதி உதவி அளிக்க ஸ்டேட் வங்கிக்கும் வேலைவாய்ப்பை காக்க பிரதமர் மோடிக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் தற்போது கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. அந்நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1500 கோடி கடன் பாக்கி வைத்துள்ளது. தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதால் அந்த நிறுவனத்தினால் வங்கிக் கடன் தவணை, மற்ற கடன் பாக்கி, ஊழியர் ஊதியம் ஆகியவற்றை தர முடியாத நிலையில் உள்ளது.

இதனால் பாரத ஸ்டேட் வங்கி இந்நிறுவன தலைவர் நரேஷ் கோயலை பதவி விலக வற்புறுத்தியதால் அவரும் அவர் குடும்பத்தினரும் பதவி விலகி உள்ளனர். தற்போது பொறுப்பேற்றுள்ள பாரத ஸ்டேட் வங்கி இந்நிறுவனத்தின் பங்குகளை வேறு நிறுவனங்களுக்கு விற்று நிறுவனத்தை நடத்த முயற்சி செய்து வருகிறது.

ஊழியர்களுக்கு நேற்று முன் தினம் அதாவது ஏப்ரல் 14 ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால் நிதி இன்மை காரணமாக இன்று வரை ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே நேற்று ஜெட் ஏர்வேஸ் விமானிகள் சங்கத்தினர் கூடி பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

கடந்த 3 மாதங்களாக பலருக்கு ஊதியம் வழங்கப்படாததால் இது குறித்து நடவடிக்கை எடுப்பது குறித்து சங்கக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊதியம் கோரி நடத்த இருந்த வேலை நிறுத்தத்தை நிர்வாகத்தினர் மற்றும் வங்கிகளின் வேண்டுகோளுக்கு இணங்க சங்கம் நிறுத்தி வைத்துளது.

நேற்று விமானிகள் சங்கத்தின் சார்பில் பாரத ஸ்டேட் வங்கிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் தங்கள் ஊதியம் மூன்று மாதங்களாக அளிக்கப்படாததால் ஊதியம் அளிக்க தேவையான நிதி உதவி அளிக்குமாறு விமானிகள் வங்கிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் பிரதமர் மோடிக்கும் விமானிகள் சார்பில் சங்கம் ஒரு கடிதம் அனுப்பி உள்ளது.  அந்த கடிதத்தில் பிரதமர் தலையிட்டு நிறுவனம் தொடர்ந்து நடக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் இதன் மூலம் 20000 க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை பாதுகாக்க வேண்டும் எனவும் விமானிகள் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.