ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலைநிறுத்தம் ஒத்தி வைப்பு: விமான பயணிகள் நிம்மதி

மும்பை:

ன்றுமுதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமான ஊழியர்களின் வேலைநிறுத்தம் வரும்  15-ம் தேதிக்கு  ஒத்தி வைக்கப்படுவதாக ஊழியர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.


ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் இந்தியாவில், 119 விமானங்களை கொண்டு சேவையாற்றி வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக பல விமானங்களை இயக்காமல் நிறுத்தி விட்டது. எத்தியோப்பியா விமான விபத்துக்கு பிறகு  737 மேக்ஸ்-8 ரகத்தை சேர்ந்த 12 விமானங்களை நிரந்தரமாக நிறுத்தி உள்ளது.

இந்த நிலையில், விமானிகள் மற்றும் விமான நிறுவன பணியாளர்க ளுக்கு சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. சம்பளத்திற்காக  வங்கிகளிடம்  கடன் பெற முயற்சித்தது. ஆனால், வங்கிகள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் தடை மறுத்துவிட்ட நிலையில், செய்தவறியாது திகைத்து வருகிறது.

தங்களுக்கு சம்பளம் தரப்படாததால், இன்று முதல் (ஏப்ரல் 1ந்தேதி) விமானத்தை இயக்க மாட்டோம் என்று விமானிகள் மற்றும் ஊழியர்கள்  ஏற்கனவே அறிவித்திருந்தனர். விமானிகளின் அறிவிப்பையடுத்து மேலும் சில விமானச் சேவைகளும் முடங்கும் நிலை உருவானது. ஏற்கனவே விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்திருந்த விமான பயணிகள் கடுமையாக அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையில்,  நிறுவனத்தை நடத்தி வந்த  நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் தங்களது பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தனர். அதையடுத்து விமான நிறுவனம்  சார்பில் ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதில்,  கடந்த ஆண்டு டிசம்பர், இந்த ஆண்டின் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களுக்கான சம்பளத்தை தற்போது ஒரே தவணையாக அளிக்க முடியாது. டிசம்பர் மாத சம்பள நிலுவைத் தொகையை இப்போது வழங்க தயாராக இருக்கிறோம் என கூறியதால், சமரசம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இன்று நடைபெற இருந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும்,  வேலைநிறுத்தம் ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விமானிகள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.