டில்லி

ஜெட் ஏர்வேஸ் புதிய உரிமையாளரான முராரி லால் ஜலன் மற்றும் கல்ராக் கேபிடல்ஸ்  மீண்டும் சேவையை தொடங்க தேசிய நிறுவன தீர்ப்பாயத்திடம் ஒப்புதல் கோரி உள்ளனர்.

இந்தியாவின் தனியார் விமானச் சேவையில் மிகவும் பெரிய அளவில் இயங்கி வந்தவற்றில் ஒன்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் கடன் அதிகரிப்பால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டது.  இதைச் சீரமைக்க எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்து தினசரி செலவுக்கும் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டது.  இதை அடுத்து சேவைகள் 2019 ஆம் வருடம் ஏப்ரல் 17 முதல் முழுமையாக நிறுத்தப்பட்டன.

இதையடுத்து இந்நிறுவனத்தின் அப்போதைய உரிமையாளரான நரேஷ் கோயல் விலக்கப்பட்டு கடன் கொடுத்தவர்கள் நிறுவனத்தை ஏற்றுக் கொண்டனர்.  இவர்கள் பாரத ஸ்டேட் வங்கி தலைமையில் இயங்கி இந்த நிறுவனத்தை விற்க முயற்சி செய்தனர்.   இதற்கான ஏலத்தில் கலந்துக் கொண்ட தொழிலதிபர் முராரி லால் ஜலன் மற்றும் கல்ராக் கேபிடல் நிறுவனத்தின் கூட்டமைப்பு தற்போது பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

தற்போது இந்த நிறுவனத்தை மீண்டும் இயக்க தேசிய நிறுவன தீர்ப்பாயத்திடம் இந்த கூட்டமைப்பு ஒப்புதல் கோரி விண்ணப்பித்துள்ளது.   இந்த ஒப்புதல் கிடைத்த உடன் வரும் கோடைக்காலத்தில் நிறுவனத்தை மீண்டும் இயக்க கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.  இதற்காக ஏற்கனவே ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இயக்கி வந்த உள்நாட்டுச் சேவைகளைத் திரும்பப் பெறக் கூட்டமைப்பு முயன்று வருகிறது.  அத்துடன் வெளிநாட்டு சேவைகளையும் மீண்டும் தொடரவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த சீரமைப்பு திட்டத்தின் மூலம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களின் விமானச் சேவையை மீண்டும் தொடர உத்தேசித்துள்ள கூட்டமைப்பு இதன் மூலம் இந்த நகரங்களின் பொருளாதாரம் உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.  இதைத் தவிர தனியாருக்கான தனி சேவை, சரக்கு போக்குவரத்து ஆகியவற்றையும் நடத்தத் திட்டமிட்டுள்ள இந்த கூட்டமைப்பு புதிய நிறுவனம் எதையும் தற்போது தொடங்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளது.